Published : 10 Mar 2018 12:58 PM
Last Updated : 10 Mar 2018 12:58 PM
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ‘நோட்டா’வுக்கு ஏறக்குறைய 1.33 கோடி மக்கள் வாக்களித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ஏடிஆர்) கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை நாட்டில் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகள் குறித்து ஆய்வு செய்தது. அது குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு ஆதரவாக, ஒரு கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 577 வாக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக தேர்தல் ஒன்றுக்கு 2.70 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்புதெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு அல்லது வாக்குச்சீட்டு முறை வாக்குப்பதிவில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை அதாவது ‘நோட்டா’ முறையை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2013ம்ஆண்டு செப்டம்பர் 27-ம்தேதி உத்தரவிட்டது. மேலும், நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் ரகசியமும் காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதன்படி 2013ம் ஆண்டு முதல்முறையாக சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
2014-ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நோட்டா 1.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதாவது, 60 லட்சத்து 2 ஆயிரத்து 942 வாக்குகள் பெற்றது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் 46ஆயிரத்து 559 வாக்குகளும், மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 123 வாக்குகளும் பதிவாகின.
இதில் கடந்த 2015ம் ஆண்டு பீகார், டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்அதிகபட்சமாக நோட்டாவில் 2.08 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹார் மாநிலத்தில் 9.47 லட்சம் வாக்குகளும், டெல்லியில் 35 ஆயிரத்து 897 வாக்குகளும் பதிவாகின.
மேலும், கோவா, டெல்லி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலில் முக்கியக்க ட்சிகளைத் தவிர்த்து அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகள் பெற்ற இடத்தில் நோட்டா இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT