Last Updated : 01 Mar, 2018 06:56 PM

 

Published : 01 Mar 2018 06:56 PM
Last Updated : 01 Mar 2018 06:56 PM

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்

இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி,வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் கிடைத்ததையடுத்து லண்டனிலிருந்துன்  நேற்று காலை சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு பொருளாதார பிரிவு அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது..

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம்  விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த ஒரு நாள் காவல் முடிந்ததையடுத்து, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த ப.சிதம்பரம் தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.

இந்நிலையில், சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன் சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 14 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் ஏஎஸ்சிபி நிறுவனம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கார்த்தி சிதம்பரத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதற்காக, ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு பணம் அனுப்பப்பட்டதற்கான இன்வாய்ஸ் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதால், 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுனில் ராணா, கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x