Published : 05 Mar 2018 08:07 PM
Last Updated : 05 Mar 2018 08:07 PM
பொருளாதார வல்லுநர் என சொல்லிக்கொள்ளும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் நாட்டின் வங்கித்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக குற்றசம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி, மெகுல் சோக்சி குறித்து காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின. இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கு பதிலடியாக டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''காங்கிரஸ் கட்சி எப்போதும் சீர்திருத்தங்களுக்கு எதிரானது. கடந்த ஆண்டுகளாக அச்சத்தோடும், குழப்பத்தோடும் அரசியல் செய்து வருகிறது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வங்கி தொடர்பாக சரியான தரவுகளை அளிக்கவில்லை.
நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், எந்தவிதமான வாராக்கடனையும் அளிக்கவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு வங்கி சார்பில் அட்வான்ஸாக கொடுக்கப்பட்ட கடன் ரூ.18.06 லட்சம் கோடியாகும். ஆனால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தத் தொகை ரூ.52.15 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த செயல்படாத சொத்துகள் மட்டும் அப்போது 36 சதவீதமாக இருந்து, இப்போது, 82 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
சிறந்த பொருளாதார வல்லுநர் எனக் கூறப்படும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் ஒட்டுமொத்த வங்கித்துறை சீரழிந்தது, அனைத்து வகையான தலையீடுகளும் ஏற்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன.
நிரவ் மோடி விவகாரத்தில் சிக்கியுள்ள அவரின் மாமா மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் கடந்த 2014-ம்ஆண்டு உதவியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தங்கம் இறக்குமதியில் 80:20 என்ற கட்டுப்பாடு வந்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. இதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை மீண்டும் ஏற்றுமதிக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். அந்த வகையில் 7 தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளித்தார், அதில் கீதாஞ்சலி நிறுவனமும் ஒன்றாகும்.
போபர்ஸ் உள்ளிட்ட ஆயுதக்கொள்முதலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ள காங்கிரஸ் கட்சி இப்போது, ரபேல் போர்விமானக் கொள்முதலில் பாஜகவை குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்து பிரதமர் மோடியின் முயற்சியால் ஒப்பந்தம் நிறைவேறியது. மிகச்சிறந்த வகையிலும், குறைந்த விலையிலும் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.''
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT