Last Updated : 28 Mar, 2018 08:29 AM

 

Published : 28 Mar 2018 08:29 AM
Last Updated : 28 Mar 2018 08:29 AM

இந்திய தேசிய காங்கிரஸ் முஸ்லிம் கட்சியா...?

மீபத்தில் நடந்து முடிந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'காங்கிரஸ் முஸ்லிம் கட்சியாக பார்க்கப்பட்டதற்கான பலனை அனுபவித்துவிட்டது' எனப் பேசியிருக்கிறார். . இதன் அரசியல் பின்னணி குறித்துப் பார்ப்போம்.

.

மண்டல் கமிஷன், ராமர் கோயில் விவகாரத்தால் கடந்த 1989-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் தங்களைச் சிறுபான்மை மக்களைப் போலக் கருதத் தொடங்கினர். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும்தான் இதற்குக் காரணம் என பலரும் ஆட்சேபிக்கலாம். அது மட்டும் காரணமல்ல. அது அரசியல். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டி ஒரு பிரிவினர் அரசியல் செய்தால், எதிர் பிரிவினர் பெரும்பான்மையினரும் பாதுகாப்பில்லாமல் தான் இருப்பதாகப் பிரச்சாரம் செய்வார்கள். காங்கிரஸ் கட்சி கடந்த 1985 வரை இப்படித்தான் மிகத் திறமையாக அரசியல் செய்தது. ஷா பானு வழக்கில் அது செய்த மிகப் பெரிய தவறு அதன் அழிவுக்கு வழி வகுத்தது.

அதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வந்த பெரும்பான்மை இந்து மக்களிடம் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஆதரவு பெருகியது. இதன் காரணமாக அடுத்துவந்த எந்தத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராட வேண்டி வந்தது.

சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்தது. இதில் சோகம் என்னவென்றால், சிறுபான்மை மக்களுக்கும் அந்தக் கட்சி பெரிதாய் எதுவும் செய்துவிடவில்லை. இதை முஸ்லிம்களும் அறிவார்கள்.

காங்கிரஸ் அரசு 'பட்லா ஹவுஸ்' என்கவுன்ட்டரை நடத்தியது. அதை நடத்திய போலீஸ் அதிகாரியும் அதில் கொல்லப்பட்டார். அவருக்கு 'அசோக் சக்ரா' விருதை வழங்கியது. அதன்பின், அது 'போலி என்கவுன்ட்டர்' என்றும் அதனால் சோனியா மிகவும் வருத்தப்பட்டார் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரே கூறினார். 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1' ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு எதிரானது எனக் கூறி 'பொடா' சட்டத்தை வாபஸ் பெற்றது. அதன்பின் அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தது. இது குறித்து ஆராய சச்சார் கமிட்டியை அமைத்தது. அதன் பரிந்துரைகளை அமல் செய்யவில்லை.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி வருகிறது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் அறிவிப்பு. அது, 'தேசிய வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை' என்ற அறிவிப்பு. அதன்பிறகு அதுவும் அமல் செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் இது ஏமாற்றுவேலை எனப் புரிந்து கொண்டார்கள்.

'தீவிரவாதிகளைக் கொல்வார்களாம், பிறகு அவர்களே தீவிரவாதிகளை பாதிக்கப்பட்டவர்கள் என புகழ்வார்களாம். இவர்கள் சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் ஆபத்தான கூட்டம். எல்லாம் ஓட்டுக்காக. இதுவரை சகித்தது போதும்' என இந்துக்கள் நினைத்தார்கள். இதனால் இந்து, முஸ்லிம் இருதரப்பையும் இழந்தது காங்கிரஸ். முஸ்லிம்கள் மாநில அளவில் வலுவாக இருக்கும் தலைவர்களைத் தேர்வு செய்து கொண்டார்கள். சோனியா சொன்னது போல், 'இது முஸ்லிம்கள் கட்சி' என நினைத்து இந்துக்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

காங்கிரஸ் கட்சி அழிந்ததோடு, இந்தத் தவறான அரசியலால் முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை, உரிமையை இழந்தனர். மக்களவையில் பெரும்பான்மையாக உள்ள கட்சியில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் தவிர, வேறு எந்த அமைச்சரும் இல்லை. முக்கியத் துறைகளில் செயலாளர் மட்டத்தில் எந்த அதிகாரியும் முஸ்லிம் இல்லை. பாதுகாப்பு, உளவுப் பிரிவுகளிலும் இதே நிலைமைதான். காஷ்மீர் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் முஸ்லிம் முதல்வர் இல்லை. உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 20 சதவீதமாக இருந்தும் 80 சதவீத இடங்களில் வென்ற பாஜக, ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை.

முஸ்லிம்களின் ஏமாற்றம் முஸ்லிம் தலைவர்களான அசாதுதீன் ஓவைசி மற்றும் பத்ருதீன் அஜ்மல் ஆகியோரின் குரல்களில் எதிரொலிக்கிறது.

முஸ்லிம் ஓட்டுகள் மட்டுமே வெற்றியைத் தேடித் தராது என உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் முந்தைய தலைவர்கள், முக்கிய சாதிக்கட்சிகளுடனும் குழுக்களுடனும் கூட்டணி வைத்தார்கள். இந்தக் கூட்டணி பின்னாளில் உடைந்தது. பாஜக வட மாநிலங்களிலும் மேற்கு மாநிலங்களிலும் உள்ள உயர் சாதியினரைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டது. பாஜகவின் தோல்வியை உறுதி செய்யும் இதர பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்கத் தொடங்கினர்.

கடந்த காலங்களில், முஸ்லிம்கள் தங்களிடம் உள்ள வாக்கு வங்கி மூலம், யார் நாட்டை ஆள்வது என்பதை முடிவு செய்வதாக பாஜகவினர் புகார் கூறினர். மோடி - அமித் ஷா கூட்டணி இதை மாற்றி விட்டது. போதுமான இந்துக்களைத் திரட்ட முடிந்ததால், அவர்களுக்கு முஸ்லிம்கள் தேவையில்லை. இன்றைய அரசியல் சூழலில் தங்கள் கொள்கையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே காங்கிரஸால் நிலைத்து நிற்க முடியும்.

தனது எதிர்காலத்துக்காக, இடதுசாரிகளிடமிருந்து விலகி உண்மையான மதச்சார்பற்றக் கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும். ராகுல் காந்தியின் கோயில் பயணத்தின் சூட்சுமம் இதுதான். இந்த அர்த்தத்தில்தான், 'காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் கட்சியாகப் பார்க்கப்படுகிறது' என சோனியா காந்தியும் சொன்னார்.

சேகர் குப்தா,

‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ். ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x