Last Updated : 11 Mar, 2018 07:35 PM

 

Published : 11 Mar 2018 07:35 PM
Last Updated : 11 Mar 2018 07:35 PM

குஜராத் மாநிலத்தின் நிரவ் மோடிக்கு யார் உதவி இருப்பார்கள்?- ப.சிதம்பரம் கேள்வி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடி மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொலைத்தொடர்பு துறை குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரியின் அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை குறித்து மிகைப்படுத்தப்பட்டு அறிக்கை தரப்பட்டது. இதற்கான விலையை நாங்கள் அரசியல் களத்தில் கொடுத்து விட்டோம்.

வர்த்தகரீதியான பிரச்சினையை வர்த்தகரீதியாகவே மட்டும் பார்த்து இருக்கவேண்டும், அணுகி இருக்க வேண்டும். ஆனால், சிஏஜியின் அறிக்கையை சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக திரித்துக் கூறிவிட்டன. இதற்கான ஒட்டுமொத்த விலையையும் இப்போது நாடு கொடுத்து இருக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாகக் கூறி சிஏஜி தாக்கல் செய்தஅறிக்கையை 2014ம்ஆண்டு தேர்தலில் பாஜக பரபப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டன. இதனால்தான் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ.12,500கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி அனைத்தும் ஒரே துறையான நகைகள் தயாரிக்கும்,விற்பனை செய்யும் துறையில் நடந்துள்ளது. இந்த மோசடியின் பிரதான குற்றவாளிகள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மாநிலம் குஜராத். நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த மோசடி நடக்கவில்லை. ஆனால், பல்வேறு தரப்பட்ட அதிகாரிகள், மக்கள் அவர்களுக்கு உதவி இருக்கலாம். நிரவ் மோடிக்கு குஜராத்தில் இருந்து யார் உதவி இருக்கலாம், எப்படி உதவி இருக்கலாம். அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது.

குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்பட்டது போல் கர்நாடக மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிசிறப்பாகச் செயல்படும். சந்தேகமின்றி மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வரும்.

நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து இருக்கிறது, வேலையின்மை அதிகமாக இருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு தெரியும். அதைத் தெரிந்துகொண்டே இளைஞர்களை பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று கூறுவது காயத்தின் மீது உப்பை தடவி வேதனையை அதிகப்படுத்துவதாகும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x