Last Updated : 29 Mar, 2018 08:02 AM

 

Published : 29 Mar 2018 08:02 AM
Last Updated : 29 Mar 2018 08:02 AM

மகாத்மா காந்தி உடலில் 4-வது குண்டு இல்லை: மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மர்மம் இருப்ப தாக கூறி, வழக்கை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு மும்பையைச் சேர்ந்த டாக்டர் பங்கஜ் பத்னீஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஏழு மாதங்களாக நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதி எஸ்.ஏ.பாப்தே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வருமாறு:

மகாத்மா காந்தி கடந்த 30.1.48-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்து 70 ஆண்டு கள் கடந்து விட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் கூட தற்போது உயிருடன் இல்லை.

நீண்ட காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட ஒரு வழக்கை, கல்வி ஆராய்ச்சியில் கிடைத்த தகவல் என்ற அடிப்படையில் மறு விசாரணை நடத்தக் கோருவதை ஏற்க முடியாது. அப்படி செய்வது போகிற வழியில் காதால் கேட்கும் விஷயத்தை வைத்து சட்டரீதியாக மறு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு சமம்.

பலர் கூடியிருந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தி சுடப்பட்டார். மூன்று குண்டுகள் காந்தியின் உடலில் நுழைந்துள்ளன.

காந்தியின் வலது மார்பு முனையின் அருகில், வலது மார்பின் கீழ், வலது வயிறு ஆகிய மூன்று இடங்களில் குண்டு துளைத்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கை யில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது குண்டு பட்டதற்கான எந்த காயமும் இல்லை.

காந்தி கொலை குறித்து அன்று மாலை 5:45 மணிக்கு போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 3 குண்டு காயங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. கபூர் ஆணைய அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இது வீண் முயற்சி. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இத்தீர்ப்பு குறித்து மனுதாரர் பங்கஜ் பத்னீஸஸ்ம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உண்மையை வெளிக் கொண்டுவர நான் எடுத்த பல முயற்சிகளில் ஒன்றுதான் இந்த வழக்கு. இந்த தொடர் முயற்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், எனது முயற்சி தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x