Published : 30 Mar 2018 08:18 AM
Last Updated : 30 Mar 2018 08:18 AM
ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் தலைவராகப் பதவியேற்ற பிறகு இஸ்ரோவின் முதல் ராக்கெட் பய ணம் வெற்றிகரமாக அமைந்துள் ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நம் நாட்டின் சொந்த தேவைகளுக் காக மட்டுமின்றி, வணிக ரீதியாக வும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ எனும் தகவல்தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட்டை செலுத்துவதற்கான 27 மணிநேர கவுன்ட்-டவுன் கடந்த 28-ம் தேதி மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், திட்டமிட்டபடி ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் நேற்று மாலை 4.56 மணிக்கு ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடங்களில் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோவில் குழுமியிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இஸ்ரோ தலைவர் கே.சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் . இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் கிரண்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
49.1 மீட்டர் நீளம், 415.6 டன் எடையுள்ள ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் உயர்சக்தி கொண்ட எஸ்-பேண்ட் (S-Band) அலைவரிசை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘எஸ்-பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக ஜிசாட்-6ஏ செயற்கைக் கோளில் 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ பொருத்தப்பட்டுள்ளது. செல்போன் சேவைகளுக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அதிக எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த, ராக்கெட்டுக்கு கூடுதல் உந்துவிசை தேவை. எனவே, சந்திரயான்-2 போன்ற பெரிய திட்டத்தில் பயன்படுத்தும் நோக்கில், ஹை திரஸ்ட் விகாஸ் இன்ஜின் (எச்டிவிஇ) ஜிஎஸ்எல்வி -எஃப்08 ராக்கெட்டில் முதல்முறையாக இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. இதன்மூலம் 70 கிலோ கூடுதல் எடையை சுமந்து செல்ல முடியும். இதுபோன்ற 5 இன்ஜின்களை சந்திரயான்-2 திட்டத்தில் பயன்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இதன்மூலம் கூடுதலாக சுமார் 250 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.
மேலும் 10 செயற்கைக் கோள்
ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் செலுத்தப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியபோது, ‘‘ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட்டின் பயணம் வெற்றிகரமாக முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள், பாராட்டுகள். அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 வாரங்களில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற் கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்ட உள்ளது’’ என்றார்.
இஸ்ரோ தலைவர் கிரண்குமா ரின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய தலைவராக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தலைவராக கே.சிவன் பொறுப்பேற்ற பின்பு, அமைந்த முதல் ராக்கெட் பயணம் வெற்றிகரமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி ட்விட்டரில், ‘‘உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இதன்மூலம் இந்தியாவை புதிய உயரத்துக்கும், வளமான எதிர்காலத்துக்கும் கொண்டு செல்கிற இஸ்ரோவின் பணி பெருமிதம் கொள்ளச் செய்கிறது’’ என்று வாழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT