Published : 27 Mar 2018 09:52 AM
Last Updated : 27 Mar 2018 09:52 AM

‘ஆபரேஷன் திராவிடம்’ தொடர்பான தகவல்கள்: தெலுங்கு நடிகர் சிவாஜி குறித்து ராஜ்நாத் சிங்கிடம் பாஜகவினர் புகார்

‘ஆபரேஷன் திராவிடம்’ குறித்து சில தகவல்களை வெளியிட்ட தெலுங்கு நடிகர் சிவாஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஆந்திர மாநில பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் சிவாஜி, விஜயவாடாவில் செய்தியாளர்களை அண்மையில் சந்தித்து பேசினார். அப்போது, தென் மாநிலங்களில் காலூன்ற ‘ஆபரேஷன் திராவிடம்’ என்ற பெயரில், ஒரு தேசியக் கட்சி ரூ.4,800 கோடி செலவு செய்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார். அந்த மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் 2019 தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றவும் அக்கட்சி திட்டமிட்டிருப்பதாக கூறினார். ஆனால், அந்தக் கட்சியின் பெயரை அவர் கூறவில்லை. எனினும், அவர் பாஜகவையே மறைமுகமாக குறிப்பிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

நடிகர் சிவாஜி வெளியிட்ட இந்தத் தகவல் ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர பாஜக தலைவரும், விசாகப்பட்டினம் எம்.பி.யுமான ஹரிபிரசாத் தலைமையிலான மாநில பாஜக நிர்வாகிகள் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜியின் கருத்தால், பாஜகவுக்கு தென் மாநிலங்களில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சிவாஜி தரக்குறைவாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நரசராவ்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சிவாஜி மீது விஜயவாடா நகர பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x