Published : 15 Mar 2018 08:14 PM
Last Updated : 15 Mar 2018 08:14 PM
பிஹார் மாநிலத்தில், பாஜக தோல்வியுற்ற அராரியா மக்களவைத் தொகுதி விரைவில் தீவிரவாதிகள் சங்கமிக்கும் இடமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரதீப் சிங்குமாரை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லாலு கட்சியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் சர்பிராஸ் ஆலம் வெற்றி பெற்றார். பாஜக கட்சி இங்கு மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிஹார் மாநிலத்தில் உள்ள அராரியா தொகுதி, நாட்டின் எல்லைப்பகுதியை ஓட்டிமட்டும் அல்ல, நேபாளம், வங்காளதேசத்துக்கு அருகேயும் இருக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் கொடிய சிந்தாத்தங்களை கொண்டவர்கள். இது பிஹார் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாகும். விரைவில் அராரியா தொகுதி தீவிரவாதிகளின் கூடாரமாகவும், சங்கமிக்கும் இடமாகவும் மாறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கூறுகையில், ‘ ராஷ்ட்ரிய ஜனதா தளம் புதிய அரசியல் இலக்குகளையும், அரசியல் கலாச்சாரத்தையும் தொடங்கி இருக்கிறது. அராரா தொகுதியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க மத்திய அரசுக்கு தெரிவித்து உறுதி செய்ய வேண்டும். முஸ்லிம்கள் மட்டும் அந்த தொகுதியில் வசிக்கவில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் வசிக்கிறார்கள். ஆதலால், தீவிரவாதிகள் சங்கமிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது’ எனத் தெரிவித்தார்.
ராப்ரி தேவி
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத்தலைவரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி இது குறித்து கூறுகையில், ‘ அனைத்து தீவிரவாதிகளும் பாஜக அலுவலகத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ்
மேலும், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறுகையில், ‘ டெல்லியில் மத்தியில் ஆள்வதும், பிஹாரில் ஆள்வதும் பாஜக என்பதை மத்திய அமைச்சர் உணராமல் பேசுகிறார். நிதிஷ் குமார் அரசு மீது மத்தியஅரசுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், ஏன் அவரை ஆட்சியில்இருந்து இறங்கச் சொல்லக்கூடாது அல்லது ஆதரவை வாபஸ்பெறக்கூடாது. இது நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய அவமானம்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT