Last Updated : 08 Mar, 2018 07:31 PM

 

Published : 08 Mar 2018 07:31 PM
Last Updated : 08 Mar 2018 07:31 PM

உறவு முறிந்தது: பிரதமரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர் தெலுங்குதேசம் எம்.பி.க்கள்

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதித்தொகுப்பு, சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, மத்தியஅமைச்சரவையில் இருந்து தெலங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமாசெய்து பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதத்தை இன்று மாலை அளித்தனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி சமாதானம் செய்தும் அது தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் கடந்த 4ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி தனது அமைச்சரவை ரீதியான உறவை முறித்துக்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, சிறப்பு நிதித்தொகுப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 4ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும்பட்ஜெட்டில் இல்லை. இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலும், நாடாளுமன்றக் கூட்டத்திலும் கடும் அமளியில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மார்ச் 5-ம் தேதிக்குள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதித்தொகுப்பு அறிவிக்காவிட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார். ஆனால், மத்திய அரசின் சார்பில் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங் சந்திரபாபு நாயுடுவிடம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியும் தொலைபேசியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அழைத்து சமாதானம் பேசியுள்ளார். ஆனால், அதுவும்தோல்வியில் முடிந்ததையடுத்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த இரு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, விமானப்போக்குவரத்து துறையை வகித்த அசோக் கஜபதிராஜு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை வகித்த ஓ.எஸ்.சவுத்ரி ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைஅளித்துள்ளதாக ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தெலுங்கு தேசம் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி கூறுகையில் “ நாங்கள் அமைச்சர் பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளோம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். எங்கள் மாநிலத்தின் நலனுக்காக இதை செய்துள்ளதில் தவறில்லை. பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து எங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டோம்” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்ததைக் கண்டித்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசில் அமைச்சர் பதவி வகித்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் காமினேனி சீனிவாஸ், கொண்டலா மணிக்கயலா ராவ் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x