Published : 18 May 2019 12:00 AM
Last Updated : 18 May 2019 12:00 AM
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் மதியம் டெல்லியில் கூடும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப ஆலோசனை செய்ய உள்ளனர்.
பாஜக அல்லது தேஜகூவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், தாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசிக்க உள்ளன. பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போனால், எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது சந்தேகம் எழுப்பி பாஜக மீது புகார் கிளப்ப உள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவுத்துறை, அரசை எச்சரித்து உஷார்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உளவுத்துறை வட்டாரம் கூறும்போது, ‘‘மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அமர்வது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அவமானம் ஆகும். ஏனெனில், கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பிருந்தும் தங்களுக்குள் ஒற்றுமையின்மையால் அது ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இதற்கு பதில்சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதை திசைதிருப்பி சமாளிக்க, இவிஎம்-கள் உதவியால் பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி நாடு முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள பாஜகவே உ.பி.யிலும் ஆள்வதால் அம்மாநிலத்திற்கு இந்த தகவல் கசியவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடந்தால், அதை சமாளிக்கவும் உ.பி. அரசு தயாராகி வருகிறது. வாக்குப்பதிவு நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய, எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு தொகுதிக்கு ஐந்து இவிஎம்-களின் ஒப்புகை சீட்டை (விவிபாட்) பதிவான வாக்குகளுடன் ஒப்பிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், மக்களவை தேர்தல் முடிவிற்கு வரும் நிலையில் ஐம்பது சதவிகித இவிஎம்-களின் ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட எதிர்க்கட்சிகள் மத்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துகின்றன. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டால் இவிஎம் மீதான பிரச்சினை மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT