Published : 11 May 2019 12:13 PM
Last Updated : 11 May 2019 12:13 PM
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூணூல் அணியும் மக்களும் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.
அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி, வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தேசத்துக்காக உழைப்பவர் மோடி. ஆனால் கபடதாரிகளும் ஊழல் மிகுந்த காங்கிரஸாரும் அவருக்கு அவமதிப்புகளைத் தவிர எதையும் தருவதில்லை. சிலர் இருக்கிறார்கள். அவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூணூல் அணிவார்கள். 5 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா செல்வார்கள். தேர்தலின்போது மட்டும் கங்கை தரிசனத்துக்காக வருவார்கள்.
அயோத்திக்கு செல்வார்கள். ஆனால் ராமர் கோயிலின் முன்பு தலை வணங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டு வங்கி முக்கியம். மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அமேதியில் இருக்கும்போது வாரணாசியில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்படும். ஆனால், போர்க்களத்தில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள். வாரணாசியை மட்டுமல்ல, அமேதியை விட்டும் ஓடிவிடுவார்கள். அத்தோடு வயநாட்டுக்குச் சென்றுவிடுவார்கள் என்றார் ஸ்மிரிதி இரானி.
முன்னதாக வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி இம்முறை அமேதி, வயநாடு என இரண்டு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியில் கடைசி கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT