Published : 19 May 2019 12:06 PM
Last Updated : 19 May 2019 12:06 PM
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார்நாத் சென்ற பிரதமர் மோடியின் செயல் விதிமுறை மீறல் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மக்களவைத்த தேர்தல் பிரச்சாரம் முடிந்ததையொட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலம், இமயமலையில் அமைந்துள்ள கேதார் நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு, கேட்டறிந்த மோடி, நேற்று இரவு குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டார். அதன்பின் இன்று காலை பேட்டி அளித்த பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலின் மேம்பாட்டுக்கான அனைத்துப் பணிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் டேரீக் ஓ பிரயன் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்டவாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் 17-ம் தேதி மாலை 6மணியுடன் முடிந்துவிட்டது. ஆனால், பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் மிகப்பெரிய அளவில் நாடுமுழுவதும் செய்தி சேனல்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகிறது. இது ஒட்டுமொத்த தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும்.
அதுமட்டுமல்லாமல் கேதார்நாத் கோயிலுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்த பிரதமர் மோடி, மக்களிடமும், ஊடகங்களிடமும் பேசியுள்ளார். இது ஒட்டுமொத்தமாக விதிகளை மீறியது, ஒழுக்கத்துக்கு மாறானது.
பிரதமர் மோடி ஒவ்வொரு நிமிடம் செய்யும் செயலும் உள்நோக்கத்துடன் மக்களை பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊடகங்களால் ஒளிபரப்பப்படுகிறது. மோடி பேசும் போது அவருக்கு பின்னால் இருந்து "மோடி, மோடி" என்ற கோஷமும் ஒலிக்கிறது.
இந்த நடவடிக்கை அனைத்தும் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ர தீய நோக்கத்தில் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையானது.
ஒட்டுமொத்த தேர்தல் விதிமுறை மீறல் நடந்தபோது, ஜனநாயகத்தின் மிகப்பெரிய அமைப்பான தேர்தல் ஆணையம் தேர்தலின்போது கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு இருக்கிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு மோடியின் பேச்சு தொடர்பான ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மூடத்தனமான, நியாயமற்ற பிரச்சாரம் தார்மீக ரீதியாக தவறாகும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT