Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM
பிரதமருக்கு ஒரு சட்டம், மாநில முதல்வர்களுக்கு ஒரு சட்டமா? பிரதமர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ? என தேர்தல் ஆணையம் மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக குற்றம் சாட்டினார்.
ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் நேற்று செய்தியாளர்களிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஆந்திராவை போன்று மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறுஏற்பட்டது. வாக்குப்பதிவு சதவீதத்தை குறைக்கவே மேற்கு வங்கத்தில் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திரத்தை எதிர்த்து தெலுங்கு தேசம் பல ஆண்டுகளாகவே போராட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது விவிபாட் இயந்திர ஸ்லிப்கள் வந்தன. பல நாடுகளில் இப்போதும் கூட வாக்குச்சீட்டு முறைதான் அமலில் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு வாக்குப் பதிவானதாக செய்திகள் வந்துள்ளன.
மத்தியபிரதேசம், மேற்கு வங்கத்தில் கூட இதே நிலைதான் உள்ளது. நான் எனக்காக ஒரு ஆந்திர மாநிலத்தின் பிரச்சனையை மட்டும்பேசவில்லை. இது நாட்டின் பிரச்சனை. தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும்.
ஆனால், தற்போது, பிரதமருக்கு ஒரு சட்டம், மாநில முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா? அவருக்கு என்று தேர்தல் விதிமுறைகள் கிடையாதா? எதிர்க்கட்சிகளை அவர் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாமா? புயல் வந்தாலும் ஒரு மாநில முதல்வர் அதிகாரிகளுடன் மக்கள் நலனுக்காக ஆலோசனை நடத்தக்கூடாதா? இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT