Last Updated : 09 May, 2019 12:00 AM

 

Published : 09 May 2019 12:00 AM
Last Updated : 09 May 2019 12:00 AM

யோகியின் கவுரவப் பிரச்சினையாகும் கோரக்பூர் வெற்றி

உபியின் கிழக்குப்பகுதியான கோரக்பூரில் கடைசி கட்ட தேர்தலாக மே 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதி கடந்த 1991 முதல் 2018 வரை பாஜக வசம் இருந்து வந்தது. இதற்கு அங்குள்ள பிரபல கோரக்நாத் மடம் அப்போது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் தலைவராக இருந்த மஹந்த் அவைத்யநாத் பாஜகவின் முதல் எம்பியாக இருந்தார். பின்னர் யோகி ஆதித்யநாத் 1998 முதல் பாஜக எம்பியானார்.

2014 முதல் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். யோகி ஐந்து முறை எம்பி பதவி வகித்த பின் உ.பி.யின் முதல்வரானதால் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த வருடம் கோரக்பூரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை தோற்கடித்திருந்தார்.

இந்த தேர்தலில் பிரவீன் பாஜகவில் இணைந்து சந்த் கபீர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, இந்தமுறை மாயாவதியும், அகிலேஷும் இணைந்து சமாஜ்வாதி வேட்பாளராக ராம்புவல் நிஷாத் என்பவரை நிறுத்தியுள்ளனர். இவர், உ.பி. முதல்வராக அகிலேஷ் இருந்தபோது அவரது அமைச்சராக இருந்தவர். எனவே, கோரக்பூரில் வெற்றி பெறுவதை முதல்வர் யோகி தனது கவுரவப் பிரச்சனையாகக் கருதுகிறார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதி செய்தி தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி கூறும்போது, ‘இதுவரையும் எதிர்க்கட்சி வேட்பாளர்களால் வாக்குகள் பிரிந்து பாஜக வென்று வந்தது. இப்போது அது தடுக்கப்பட்டிருப்பதால் இனி எங்களுக்கே வெற்றி’ என்றார்.

கோரக்பூரில் மிகவும் அதிகமாக நிஷாத் எனும் மீனவர் சமுதாய வாக்குகள் 4.5 லட்சம் உள்ளது. அடுத்த எண்ணிக்கையில் 3.5 லட்சமாக முஸ்லிம்களும், பிராமணர் மற்றும் தாக்குர் பிரிவினர் வாக்குகள் 2 லட்சம் மற்றும் தலித்துகளின் வாக்குகள் 1.5 லட்சமும் உள்ளன. இதனால், கோரக்பூரின் வெற்றிக்கு சமூக வாக்குகள் காரணமாக உள்ளது. கோரக்பூரில், போஜ்புரி மொழி திரைப்படங்களில் நாயகனான ரவி கிஷணை பாஜக வேட்பாளராக்கி உள்ளது. பிஹாரின் எல்லையில் உள்ள இப்பகுதிவாசிகள் அம்மாநிலத்தின் போஜ்புரி மொழியை அதிகம் பேசுகின்றனர். இதனால், ரவி கிஷண் தமக்கு வெற்றியை பெற்றுத்தருவார் என யோகி கருதுகிறார்.

இதனிடையே, யோகியின் முன்னாள் நெருங்கிய சகாவான சுனில்சிங்கும் ’இந்து யுவ வாஹினி பாரத்’ எனும் புதிய அமைப்பை துவக்கி அதன் சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரும் வாக்குகளை பிரித்து பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x