Published : 09 Apr 2014 10:39 AM
Last Updated : 09 Apr 2014 10:39 AM
குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்சங்கத்தின் கெளரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர்கள் தோல்வி அடையும் வகையில் முஸ்லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர்களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.
மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற்கடிக்க வேண்டும்.
நடந்த சம்பவத்துக்கு மோடி இதுவரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
முஸ்லிம்களின் முதல் முக்கியத்துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும்..
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT