Last Updated : 11 May, 2019 03:52 PM

 

Published : 11 May 2019 03:52 PM
Last Updated : 11 May 2019 03:52 PM

என் தந்தை கேஜ்ரிவாலிடம் ரூ.6 கோடி கொடுத்து சீட் வாங்கினார்: மேற்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் நேரடியாக ரூ.6 கோடி கொடுத்து தனது தந்தை எம்.பி. சீட் பெற்றதாக கூறியுள்ளார் அக்கட்சியின் மேற்கு டெல்லி தொகுதி வேட்பாளர் பல்பீர் சிங் ஜக்காரின் மகன் உதய் ஜக்கார்.

மக்களவைத் தேர்தலில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) 12-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் மேற்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் தன் தந்தை மீது உதய் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இடம்பெற்றுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ஒரு நாட்டின் குடிமகனாகவும், என் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் நான் சில விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டியுள்ளது. எனது தந்தைக்கு எதிராக நான் பேச வேண்டிய நிலைமை துரதிர்ஷ்டவசமானதே. ஆனால், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இதைச் சொல்கிறேன். இதை சொல்வதால் இனி நான் என் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவேனா என்றுகூட தெரியவில்லை.

எனது தந்தை அரசியலுக்கு வந்தே மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன்னதாகவே அவர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்தார், ஆம் ஆத்மியில் இருந்தார் என்றெல்லாம் கூறப்படுவது பொய். அதற்கான எந்த சாட்சியுமே இல்லை.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மேற்கு டெல்லியில் போட்டியிடுவதற்காக எனது தந்தை கேஜ்ரிவால், கோபால் ராய் ஆகியோரை சந்தித்தார். கேஜ்ரிவாலிடம் நேரடியாக ரூ.6 கோடி கொடுத்து இந்த சீட்டை அவர் வாங்கியுள்ளார். ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதிக்கு அரசியலில் சேர்ந்த மூன்றா மாதங்களில் எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

நான் சில மாதங்களுக்கு முன்னர் எனது கல்விக்காக என் தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் என் தந்தை கொடுக்கவில்லை. இப்போது தேர்தலில் போட்டியிட ரூ.6 கோடி செலவழித்துள்ளார்.

இது மட்டுமல்ல சீக்கிய கலவர சர்ச்சையில் சிக்கிய சஜ்ஜன் குமார் சிங்கை பிணையில் எடுக்க என் தந்தை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருந்தார்.

இதற்கெல்லாம் என் தந்தையும், குடும்பத்தாரும் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கேஜ்ரிவால் எவ்வளவு பொறுப்பற்றவர் என்பதை இது உணர்த்தும். தன் மீது எப்போதும் பரிசுத்த அடையாளம் காட்டும் கேஜ்ரிவால் எப்படியானவர் என்பதை நிரூபிக்க என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. நம்பகத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

இந்த கடைசி நேரத்தில் நான் சொல்ல விரும்புவதெல்லாம் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என்பதே.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நேற்று ஆம் ஆத்மி கட்சியின் கிழக்கு டெல்லி வேட்பாளர் மீது கவுதம் காம்பீர் புகார் கூறியதோடு, கேஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்தார். அவரைப் போன்றோரால்தான் நல்லவர்கள் அரசியலுக்கு வர யோசிக்கின்றனர் எனக் கூறினார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் நேரடியாக ரூ.6 கோடி கொடுத்து தனது தந்தை எம்.பி. சீட் பெற்றதாக கூறியுள்ளார்  மேற்கு டெல்லி தொகுதியி வேட்பாளர் பல்மீக் சிங் ஜக்காரின் மகன் உதய் ஜக்கார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x