Last Updated : 11 May, 2019 02:54 PM

 

Published : 11 May 2019 02:54 PM
Last Updated : 11 May 2019 02:54 PM

ஒரு குடம் தண்ணீருக்காக 4 கி.மீ பயணிக்கும் பெண்கள்: நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மேற்குவங்க கிராமத்தின் தீராத் துயரம்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்திலிருக்கிறது ஷுயிலிபோனா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக கிராமத்துப் பெண்கள் 4 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

அதுவும் கோடை வந்ததிலிருந்து வழக்கமான 4 கிமீ தூரத்தையும் தாண்டி பெண்கள் குடிநீருக்காக பயணிக்கின்றனர்.

இந்நிலையில்தான் நாளை இந்தக் கிராமம் உட்பட பல்வேறு பகுதிகள் அடங்கிய பங்குரா மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த கிராம மக்கள் வாக்களிக்க வருவார்களா என்பதுதான் கேள்விக்குறி. காரணம், அண்மையில் இந்த கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க வந்த திரிணமூல் வேட்பாளர் சுப்ரதா முகர்ஜியை மக்கள் ஊருக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. தங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு சொல்லிவிட்டு பிரச்சாரம் செய்யலாம் எனக் கூறி போராட்டம் செய்தனர்.

பாஜக வேட்பாளர் டாக்டர் சுபாஷ் சர்கார் தான் தேர்வு செய்யப்பட்டால் பங்குரா நாடாளுமன்ற தொகுதியில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது எனப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நிலைமை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அமியா பத்ரா கூறும்போது "ஆளும் கட்சியும் இப்பகுதியின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டது.

ஆனால், இங்கு நீர்ப் படுகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இங்கே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள்கூட வற்றிவிட்டன. அதனால் நிலத்தடி நீரை மீள்நிரப்புவதே ஒரே வழி" எனக் கூறுகிறார்.

பங்கூரா மட்டுமல்ல மேற்குவங்கத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள ஜாம்சோலா, நோடி, லுச்சிபூர், கிதுரியா போன்ற பழங்குடி மாவட்டங்களும் சல்தோரா, கத்ரா, தல்தங்ரா போன்ற கிராமங்களும் இதேபோல்தான் பாதிக்கப்பட்டுள்ளன.

பங்குர கிராமத்தைச் சேர்ந்த சாந்தி முர்மு பேசும்போது, "எங்கள் வீடுகளில் கழிவறை உள்ளன. ஆனால் பயன்படுத்த தண்ணீர் இல்லை. அதனால் நாங்கள் ஒதுக்குப்புறத்தைத் தேடிதான் செல்கிறோம். தேர்தல் வந்தால்மட்டுமே எல்லாக் கட்சியினரும் எங்கள் ஊர்ப்பக்கமே வருகின்றனர். தேர்தலுக்குப் பின்னர் யாரையும் பார்க்க முடிவதில்லை" என்றார்.

மேற்குவங்கத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகள் பலவற்றிலுமே தண்ணீர் பிரச்சினைதான் பிரதானமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது வரும் மே 23 தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x