Last Updated : 09 May, 2019 12:00 AM

 

Published : 09 May 2019 12:00 AM
Last Updated : 09 May 2019 12:00 AM

தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய இயக்குநராக தமிழர் நியமனம்

குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (ஜிஎன்எல்யூ) புதிய இயக்குநராக தமிழரான முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை முதல் பதவி ஏற்க உள்ளார்.

மத்திய பல்கலைக்கழகமான இதில் தற்போது முனைவர் என்.பீமல் பட்டேல் தொடர்ந்து இரண்டாம் முறை இயக்குநராக உள்ளார். இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது.

இதனால், புதிய இயக்குநரை அமர்த்த நீதிபதி டி.ஒய்.சந்தரசூட் தலைமையிலான பொதுக்குழு கடந்த வாரம் கூடி ஆலோசனை செய்தது.

இதில், இயக்குநருக்கான தேர்வுக்குழு மற்றும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு பரிந்துரையின் அடிப்படையில் முனைவர் எஸ்.சாந்தகுமார் புதிய இயக்குநராக அமர்த்தப்பட்டுள்ளார்.

சட்டக்கல்வி பயின்ற சாந்தகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 7 வருடங்கள் பணியாற்றினார். மதுரை சட்டக்கல்லூரியிலும், சென்னை சட்டக்கல்லூரியிலும் உதவிப்பேராசிரியராக பணியாற்றினார்.

அங்கிருந்து ஹரியானாவுக்கு மாறியவர், ஐடிஎம் சட்டப் பள்ளியின் இயக்குநராகவும், ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதே மாநிலத்தின் எஸ்ஜிடி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் டீன் பதவியிலும், சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தேர்வு இயக்குநராகவும் சாந்தகுமார் பணி செய்துள்ளார்.

இவர் தற்போது, ஹரியானாவின் ஜி.டி.கோயங்கா பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராக உள்ளார். ஜிஎன்எல்யூவின் இயக்குநராக சாந்தகுமார் ஐந்து வருடங்கள் பதவி வகிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x