Published : 28 May 2019 12:00 AM
Last Updated : 28 May 2019 12:00 AM
இந்தியாவில் ஓடும் நதிகளில் நீர்வளம் உள்ளவற்றில் இருந்து வற்றியப் பகுதிகளுக்கு நீரை மாற்ற அவ்வப்போது யோசனைகள் எழுந்து வருகின்றன. இதற்காக 17, ஜூலை, 1982-ல் தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம்(என்.டபிள்யூ.டி.ஏ) அமைக்கப்பட்டது. பிரதமராக பி.வி.நரசிம்மராவ் இருந்தபோது என்.டபிள்யூ.டி.ஏக்கு முழுநிதி உதவியும் அளிக்கப்பட்டது. அடுத்து வாஜ்பாய் பிரதமராக இருந்த போது திட்டத்தை ஊக்குவித்து ஆய்வுப்பணிகள் துவங்கின.
இதில், இந்தியாவில் ஓடும் 137 நதிகள் மற்றும் துணை நதிகள் அவை திசைமாறும் இடங்கள் உள்ளிட்ட 71 இடங்களும் சேர்க்கப்பட்டன. இவற்றில் தேசிய நீர்வளர்ச்சி ஆணையம் சார்பில் 74 நீர்த்தேக்கங்கள் மற்றும் 37 நதி இணைப்புகளில் நீர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மத்திய அரசில் இருந்து வேறுபட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த ஆய்வுப்பணிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு, மாநில அரசுகள் சார்பில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் அளிக்கத்துவங்கி அவையும் 2006 -ம்ஆண்டு முதல் சேர்க்கப்பட்டன. இதுவரையிலும் தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் சார்பில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் உள்பட மொத்தம் 47 திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், என்.டபிள்யூ.டி.ஏ சார்பில் இதுவரை தீபகற்ப நதிகளின் இணைப்பிற்காக 16 திட்டங்களையும், இமயமலை நதிகள் வகைக்காக 14 ஆய்வுத் திட்டங்களையும் மத்திய அரசு முடித்துள்ளது. இதில் இதுவரை நடத்தப்பட்ட நான்கு வகை ஆய்வுகளின் நிலைகள் மீதான அறிக்கையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, தமிழகம் சம்மந்தப்பட்ட நதிகள் இணைப்புத் திட்டங்கள் மொத்தம் நான்கு இடம் பெற்றுள்ளன. இந்த நான்கில் தமிழகத்திற்கு மூன்று திட்டங்களில் பலன் கிடைக்கிறது.
இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஓடும் சோமசீலாவின் பென்னாறு, கல்லணையின் காவிரி, கட்டளையின் காவிரி, வைகை, குண்டாறு, நேத்ராவதி, ஹேமாவதி, பம்பா, அச்சன்கோவில் வைப்பாறு ஆகிய நதிகள் இடம்பெற்றுள்ளன. நிதின் கட்கரி கூறியுள்ள கிருஷ்ணா, கோதாவரி நதிகள் மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஓடுகின்றன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளரும் கிருஷ்ணா மேலாண்மை வாரியத்தின் முன்னாள் தலைவருமான எல்.ஏ.வி.நாதன் கூறும்போது, ‘கோதாவரி ஆற்றின் நீர் அதிகமாக வீணாகி வருவது உண்மைதான். இதை கிருஷ்ணாவுடன் இணைப்பதால் ஆந்திராவுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும். இதில் ஆந்திரா தன்னிறைவு அடைவதுடன் தமிழகத்திற்கும் கூடுதல் நீர் அனுப்பி வைக்க முடியும்’ என்றார்.
இதனிடையே, இந்த நதிகள் இணைப்புக்கு அவை ஓடும் மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகள் சம்மதம் அளிக்க வேண்டும். இதில் தமிழகம் சம்மந்தப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு கேரளாவும், கர்நாடகாவும் சம்மதம் அளிக்கவில்லை. இதற்கு அம்மாநிலங்களுடன் முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நீர் ஆகியவற்றின் மீது தமிழகத்திற்கு நிலவும் பிரச்சினைதான் காரணம். இதனால், தமிழகம் பலனடையும் மூன்று இணைப்புத் திட்டங்களில் இதுவரை சாத்தியக்கூறுகளுக்கு முந்தைய ஆய்வு மட்டுமே நடந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆய்வுகளும் முடிந்து அதன் இணைப்பு பணிகளும் முடிய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் நிலை உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கங்கை நதி மீது ஆய்வு செய்துவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியான பேராசிரியர் பி.டி.திரிபாதி கூறும்போது, ‘என்.டபிள்யூ.டி.ஏவின் ஆய்வில் சுற்றுச்சூழலுக்கான தாக்கம் அனைத்து நதிகளுக்கும் செய்யவில்லை. இதை செய்யாமல் நதிகளை இணைப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். ஆப்பிரிக்காவில் இதுபோல் நதிகளை இணைக்க கட்டப்பட்ட நீர்த்தேக்கம் அதன் தவறான சுற்றுச்சூழல் தாக்கத்தால் அது இடிக்கப்பட்டது. இந்தநிலை நமக்கும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT