Published : 30 May 2019 06:25 PM
Last Updated : 30 May 2019 06:25 PM
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகுவதே சரியான முடிவு என மூத்த அரசியல்வாதி யஷ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி அவரது ராஜினாமா முடிவில் ஸ்திரமாக இருக்க வேண்டும். அவர் ராஜினாமா செய்யாவிட்டால் பொதுவெளியில் மதிப்பை இழப்பார். சிறிது காலத்துக்காவது காங்கிரஸ் கட்சியை வேறு யாரேனும் தலைமையேற்று நடத்தட்டும்" எனப் பதிவிட்டுள்லார்.
கடந்த மார்ச் மாதமே ராகுல் காந்திக்கு யஷ்வந்த் சின்ஹா ஓர் அறிவுரை கூறியிருந்தார். மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய அளவில் கூட்டணியை இறுதி செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.
அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் கேட்காமலேயே அறிவுரை சொல்கிறேன் ராகுல். தயவு செது பிஹார், ஜார்க்கண்ட், டெல்லியில் உங்கள் கூட்டணியை இறுதி செய்யுங்கள். இப்போதே தாமதமாகிவிட்டது" எனக் கூறியிருந்தார்.
இப்போது ராகுலுக்கு யஷ்வந்த் சின்ஹா மீண்டும் ஒருமுறை அறிவுரை சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு யஷ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமாவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்:
காங்கிரஸ் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பு என்று கூறும் ராகுல்காந்தி தனது ராஜினாமாவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் பலரின் சமாதான முயற்சி தோல்வியுற்றுள்ளது. "அடுத்த தலைவர் தேர்வாகும் வரை மட்டுமே நான் தலைவராகத் தொடர்வேன். ஆனாலும் தொடர்ந்து பாஜக சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவேன். அடுத்த புதிய தலைவருக்கு உதவுவேன்" என்று ராகுல் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் கூறியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT