Last Updated : 10 May, 2019 12:00 AM

 

Published : 10 May 2019 12:00 AM
Last Updated : 10 May 2019 12:00 AM

காவி நிறமா? புர்காவா?- பிஹாரின் சிவாண் தொகுதியில் வித்தியாசமான பிரச்சாரம்

பிஹாரின் சிவாண் தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர் முகமது சகாபுதீன். ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சியின் முக்கிய தலைவரான அவர், அக்கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

இவர் மீதான பல கிரிமினல் வழக்குகளால் சகாபுதீன், பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதி எனஅழைக்கப்படுகிறார். இரண்டு முறை எம்எல்ஏ-வாகவும் இருந்தவர், சிவாணில் ஆர்ஜேடி தவிர வேறு கட்சிகளின் கொடிகள் கூட பறப்பதற்கான சுதந்திரத்தையும் பறித்து வைத்ததாகக் கூறப்படுவது உண்டு. கடந்த 2007–ல் ஒரு கொலைவழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டு தற்போது திஹார் சிறையில் உள்ளார்.

இதனால், சகாபுதீனின் மனைவியான ஹென்னா சாஹேப், ஆர்ஜேடி சார்பில் 2009 தேர்தல் முதல் தம் கணவருக்கு பதிலாக சிவாணில் போட்டியிட்டு வருகிறார். இவரது முதல் போட்டியில் சுயேச்சையான ஓம் பிரகாஷ் யாதவிடம் தோல்வி அடைந்தார்.

2014-ல் ஓம் பிரகாஷ், பாஜகவில் இணைந்து விட அந்த தேர்தலிலும் ஹென்னா தோல்வியுற்றார். இந்தமுறை ஹென்னாவை எதிர்த்துபாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) சார்பில் கவிதா சிங் போட்டியிடுகிறார்.

இரண்டு முறை எம்எல்ஏவாகவும் இருந்தவரது கணவரான அஜய்சிங் மீதும் பல வழக்குகள் உள்ளமையால் அவரும் கிரிமினல்அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிவாணில் ஹென்னா மற்றும் கவிதாவுக்கு இடையே நேரடிப் போட்டி நிகழ்கிறது. இருவரது கணவர்மார்களுக்கும் இடையிலும் பல பிரச்சினைகளில் நேரடி மோதல் ஏற்பட்டு பரமவிரோதிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்நிலையில், பிரச்சாரத்தின் துவக்கத்தில் மேடையில் பேசிய அஜய்சிங், ஒருமுறை ஹென்னா எந்நேரமும் புர்கா அணிவதை பற்றி குறிப்பிட்டார். அத்துடன் சிலேடையாக பக்வாரங் (காவிநிறம்) புர்கா’ எனக் கூற, அதுவே இரண்டுகட்சிகளின் தரப்பிலும் கோஷமாகிவிட்டது. மேலும், பிரச்சாரத்திலும் ‘உங்கள் வாக்கு ’காவி நிறத்துக்கா? புர்காவுக்கா?’ என கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது.

இரண்டு கூட்டணிகள் தரப்பிலும் எழுப்பும் கோஷத்திற்கு காரணம் அதன் வேட்பாளர்கள் ஆவர்.

கவிதாவின் கணவர் அஜய்சிங், சிவாண் மாவட்ட இந்து யுவ வாஹினியின் தலைவராக இருப்பதும் இதற்கு காரணமாகி உள்ளது. ஹென்னாவின் கணவர் சகாபுதீன் முஸ்லிம் என்பதால் ‘சுல்தான் ஆட்சியா? ராமர் ஆட்சியா?’ என்ற கோஷமும் ஜேடியூவினரால் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பிரச்சாரங்களால், ஆறாம் கட்ட தேர்தலில் சிவாண்தொகுதியில் மே 12-ன் வாக்குப்பதிவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. லாலுவின் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் அவாமிமோர்ச்சா மற்றும் விஐபி ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூ மற்றும் லோக் ஜன சக்திஆகியவை இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x