Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM
மே 19-ம் தேதி முடிவடைந்த மக்களவை தேர்தலுக்கு ’எக்ஸிட் போல்ஸ்’ எனப்படும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகள் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளன. இதனால், அதிர்ச்சிக்குள்ளான எதிர்க்கட்சியினர் அதை நம்பத் தயாராக இல்லை.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் பிப்ரவரி 15, 1967 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதை அந்நாட்டின் சமூகவியலாளரும், அரசியல்வாதியுமான மார்சல் வேன் டேம் என்பவர் வெளியிட்டிருந்தார். இது வழக்கமான கருத்துக்கணிப்பில் இருந்து வித்தியாசமாக அமைந்திருந்தது. இதில், வாக்களித்து விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வரும் வாக்காளர்களிடம் பேசி பெறப்படுகிறது. அவர்கள் வாக்களித்தவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும், வாக்காளர்கள் பேசுவதை வைத்து ஒரு முடிவு செய்யப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கான வாக்குச்சாவடிகளில் மட்டும் எடுக்கப்படுவதால் அவை அனைத்தும் எந்நேரமும் சரியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
படிப்படியாக உலகின் பல நாடுகளிலும் வெளியாகத் துவங்கிய இந்தவகை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியாவில் 1960-ல் சமூக வளர்ச்சி ஆய்வு நிறுவனம் எனும் அமைப்பு துவக்கியது. 1980-கள் முதல் இவை ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. இதை மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் 1996-ல் முதன்முதலாக வெளியிட அதை பொதுமக்கள் கவனிக்கத் துவங்கினர். இவை, தொலைக்காட்சிகளின் விவாதங்களிலும் முக்கிய செய்திகளாக மாறத் தொடங்கின. இதனால், தலைமைத் தேர்தல் ஆணையம் அதற்கு 1999-ல் தடை விதித்துவிட, பிரச்சினை உச்ச நீதிமன்றத்தை அடைந்தது.
உச்ச நீதிமன்றத்தில் அதற்கானத் தடை விலக்கப்பட்டு அதன் பரிந்துரையின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் திருத்தம் செய்யப்பட்டது. 2010-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(யூபிஏ) அரசினால் இந்தத் திருத்தம் நடந்தது. அதில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, கடைசி வாக்குப்பதிவு முடிந்தபின் மாலையில் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் 1998-ம், 2014-ம் தவிர மற்ற பெரும்பாலான நிறுவனங்கள் கணித்தபடி முடிவுகளில் தொகுதி எண்ணிக்கை கிடைக்காத வரலாறு உள்ளது.
குறிப்பாக, என்டிஏவின் முதல் ஆட்சிக்கு பின் 2004-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அந்த அரசு தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி வரும் எனக் கணிக்கப்பட்டது. இதை அப்போது அனைத்து நிறுவனங்களும் இதையே கூறியதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் பொய்யாக்கி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு (யுபிஏ) அதிகமாக 222 தொகுதிகளும், என்டிஏவுக்கு 189 தொகுதிகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து 2009 மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பொய்த்தது. சராசரியாக அனைத்து நிறுவனங்களும் என்டிஏ மற்றும் யூபிஏவிற்கு சரிநிகரான தொகுதிகள் கிடைப்பதாக தெரிவித்திருந்தன. ஆனால், அவற்றை பொய்யாக்கும் வகையில் யுபிஏவிற்கு 262, என்டிஏவிற்கு 159 தொகுதிகள் மட்டும் கிடைத்தன.
அதேபோல், இந்தமுறை, அனைத்து நிறுவனங்களும் என்டிஏவுக்கு முந்நூறுக்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்று கணித்துள்ளன. இதனால், கடந்த காலங்களில் பொய்யான கணிப்புகளை ஏற்ற கட்சிகளும் இந்தமுறை இவற்றை ஏற்க மறுக்கின்றனர்.
இந்த கருத்துகணிப்புகள் வெளியிடும் நிறுவனங்கள் அவை சேகரித்த விதம் பற்றியும் குறிப்பிடுவது அவசியம். அவற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஆதாரங்களுடன் அந்நிறுவனங்களின் மீது தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். ஆனால், இந்த கணிப்புகளை எதிர்க்கும் கட்சிகள் எவரும் இதுவரை புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT