Published : 25 Sep 2014 05:35 PM
Last Updated : 25 Sep 2014 05:35 PM
மகாராஷ்ட்ராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு பிரச்சினை குறித்து இன்று நடைபெற இருந்த இரு கட்சி தலைவர்களுக்குமான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாஜக - சிவசேனா இடையே இருந்த 25 ஆண்டுகால கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு இரு கட்சிகளும் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்குதல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டில் முடிவு எட்டப்படாமல், கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் தொகுதி உடன்பாடு தொடர்பாக சிவசேனா பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விரு கட்சிகள் இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட உடன்பாட்டின் படி சிவசேனா 151 தொகுதிகளிலும் பாஜக 130 தொகுதிகளிலும் போட்டி யிட முடிவானது.
எஞ்சிய 7 தொகுதிகள் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள ஸ்வபிமானி ஷேத்காரி அமைப்பு (எஸ்.எஸ்.எஸ்), ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி (ஆர்.எஸ்.பி), சிவசங்கராம், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ) ஆகிய சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் 4 கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் அக்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன. இதில் எஸ்.எஸ்.பி., ஆர்.எஸ்.பி., சிவசங்கராம் ஆகிய கட்சிகள் கூட்ட ணியில் இருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தன
கடந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட இடங்களுக்கும் அதிகமாக பாஜக கோரியதால் இழுபறி நிலை நீடித்தது. இப்போது கூட்டணியே முறிவடையும் நிலை தோன்றியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT