Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது கட்சி வேட்பாளர்கள், சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 150-ல் முன்னணி பெற்றுள்ளனர். ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 24 தொகுதிகளிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. இதனால், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ஜெகன். இவர் வரும் 30-ம் தேதி, விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த மாதம் 11-ம் தேதி நடந்தது. இதில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், 7 வாக்கு மையங்களில் மட்டும் கடந்த 18-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகளும், அதன் பின்னர் 25 சதவீத ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டன. இதனை தொடர்ந்து 16 ரவுண்டுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னணி பெற்றனர்.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் பின்தங்கினர். பெரிதும் எதிர்பார்த்த நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். இதேபோன்று, காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். கடைசி வரை தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமே போட்டி நிலவியது.

குறிப்பாக ராயலசீமா பகுதிகளான சித்தூர், அனந்தபூர், கர்னூல், கடப்பா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளில் 48 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக அழைக்கப்படுகிறார். இதனால் இம்முறை இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நேற்று இரவு நிலவரப்படி ஆட்சி அமைக்க 88 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆட்சி அமைப்பது உறுதியானது. இந்நிலையில், 27 தொகுதிகளுக்கு மேல் தெலுங்கு தேசம் கட்சி முன்னனி பெறவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மதியம் முதலே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், இவரது மகனும், டிஆர் எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே. டி. ராமாராவ் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

30-ம் தேதி பதவி பிரமாணம்

ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 30ம் தேதி விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் முதல்வராக பதவியேற்க உள்ளார். இவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் நடிகை ரோஜா உட்பட பலர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 மக்களவை தொகுதிகளில் முன்னணிசட்டப்பேரவைத் தொகுதிகளில் பெற்ற மாபெரும் வெற்றியை போன்றே ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் 24 இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தெலுங்கு தேசம் முன்னணியில் உள்ளது.

நடிகர் பவன் கல்யாண் தோல்வி

ஆந்திர மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியவர் நடிகர் பவன் கல்யாண். ஆனால், இவரது ஜனசேனா கட்சி மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், இவரது கட்சி மூலம் பல இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குகளை பிரித்ததால்தான், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என கூறப்படுகிறது. காப்பு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் இவர் மூலம் சிதறின.

இவை தெலுங்கு தேச கட்சியின் வாக்குகள் ஆகும். இதன் மூலம் பல தொகுதிகளில் தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் மிக சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். ஆனால், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் காஜுவாக்கா, பீமவரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் இவர் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x