Published : 12 May 2019 12:22 PM
Last Updated : 12 May 2019 12:22 PM
பிஹார் மாநிலம் மஹராஜ்கஞ்ச் பகுதியில் கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மகாக் கூட்டணி பிரதான ஆதரவாளர் தேஜஸ்வி யாதவ்வின் பிரச்சாரத்தை கேட்க மக்கள் வெள்ளம் கூடியிருந்தது.
ஆளும் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியை அவர் கடுமையாகக் கிண்டல் செய்த போதெல்லாம் பலத்த கரகோஷம் மற்றும் சிரிப்பலைகள் அங்கு எழுந்தன.
சிலர் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு தேஜஸ்வியின் பிரச்சாரத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.
இதில் பிரச்சாரத்துக்காக மைக்கைப் பிடித்த தேஜஸ்வி யாதவ் கூடியிருந்த மக்களிடம் உரையாடும் மொழியில், “கடவுள் ராமருக்கு எப்போது விக்கல் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அவருக்கு விக்கல் ஏற்பட்டது. அப்போது அவரது அன்பு மனைவி சீதா (மாதா), ‘பிரபு என்ன ஆனது உங்களுக்கு?’ என்று கேட்டார்.
அதற்கு ராமர் பதில் அளித்தார், ‘இந்தியாவில் தேர்தல் வந்து விட்டது போலிருக்கிறது தேவி, ஏனெனில் பாரதிய ஜனதா கட்சியினர் என்னை மீண்டும் நினைக்கத் தொடங்கி விட்டனர் போலும் அதனால்தான் விக்கல்’ என்று கூறினார். இந்தக் குட்டிக்கதையைக் கேட்ட மக்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.
இதுதான் பாஜகவின் உண்மையான குணம், ராமர், ராமர் கோயில், கோயில்-மசூதி எல்லாம் அவர்களுக்கு தேர்தல் வந்தா நினைவுக்கு வரும். பாஜகவை அகற்றுங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள், நிதிஷ் குமாரை தூக்குங்கள், பிஹாரைக் காப்பாற்றுங்கள்.
நம் நிதீஷ் குமார் பாஜகவுடன் சேர்வதைக் காட்டிலும் மண்ணோடு மண்ணாகப் போவேன் என்றார் ஆனால் இன்று பாஜகவுடன் கைகோர்த்து விட்டார். ஆகவே அவரை மண்ணோடு மண்ணாக்க வேண்டும். இல்லையா? என்று ஜெயலலிதா பாணியில் கேட்க அவர்கள் ஆமாம் ஆமாம் என்று கோஷமிட்டனர்.
நீங்கள் அவரை நிதிஷ் குமார் சீஃப் மினிஸ்டர் என்கிறீர்கள், நான் அவரை சீட் குமார் (ஏமாற்றுக் காரர்) என்று அழைக்கிறேன்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து என் தந்தை லாலுவை சிறைக்கு அனுப்பினர், ஏனெனில் லாலு இருந்தால் நிதிஷ் இன்னொரு முறை ஆட்சிக்கு வர முடியாது, என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார் தேஜஸ்வி யாதவ்.
இன்று மகராஜ்கஞ்சில் வாக்குப்பதிவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT