Published : 22 May 2019 06:30 PM
Last Updated : 22 May 2019 06:30 PM
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், வன்முறை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
542 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது, பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மேலும், விவிபிஏடி, வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும் தொடக்கத்தில் எண்ண வேண்டும் எனும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் நள்ளிரவு நேரத்தில் மாற்றப்படுகின்றன என்று வதந்தி பரவியதால், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினர் உ.பி., பிஹார் மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் காவல் காத்து வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் முடிவுகள் வரும் நாளன்று நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமலும், அவ்வாறு நடந்தால் அதைச் சமாளிக்கும் வகையில் மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்படவும், வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT