Published : 10 May 2019 02:14 PM
Last Updated : 10 May 2019 02:14 PM
தன்னைக் கொல்லப்போவதாக மிரட்டும் தனது குடும்பத்திடமிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாதுகாப்பு கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த மே 6 அன்று பிரியங்கா ஷெட்டி என்பவர் தேசிய மகளிர் ஆணையத்திடம் பாதுகாப்புக் கோரியுள்ளார். தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டும் தனது
உறவினர்கள் மீது நடவக்கை கோரி புகார் மனு அளித்திருந்தார். இப்புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு புனேவின் டெலிகான் டாபேட் காவல்நிலையத்தில் பிரியங்காவின் மாமா மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
19 வயதான பிரியங்கா ஷெட்டி என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய குடும்பத்தினர் தன்னைக் கொல்லப் போவதாக மிரட்டிவருவதாக புகார அளித்திருந்தார்.
அதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரியங்காவின் உறவினர்கள் மூவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின்கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, மும்பை உயர் நீதிமன்றத்திலும் தனக்கு பாதுகாப்பு கோரி வழக்கறிஞர் நிதின் சாத்புதே மூலம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எல்எல்பி இரண்டாம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவி தன்னுடன் படிக்கும் விராஜ் அவாகேடே என்பவரை காதலித்து வருகிறார். எனினும் அவரது காதலை அவரது பெற்றோர்கள் நிராகரித்ததோடு, தொடர்ந்து அப்பெண்ணுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர். அது மட்டுமின்றி அவரது காதலரை கொன்றுவிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
பிரியங்கா, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கொலைமிரட்டல் அச்சுறுத்தலினால் கடந்த பிப்ரவரி 26 அன்று அதிகபட்ச மருந்துகளை எடுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு சிகிச்சையில் உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT