Published : 31 May 2019 12:25 PM
Last Updated : 31 May 2019 12:25 PM
மூன்று எம்பிக்களுக்கு பதவி கிடைக்காததால் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) இடம்பெற மறுத்துள்ளது.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான இக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன்(என்டிஏ) இணைந்து போட்டியிட்டது. 2014 தேர்தலை போல் இந்தமுறையும் பாஜகவிற்கு தனிமெஜாரிட்டு கிடைத்துள்ளது. எனினும், தன்னுடன் இணைந்து போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம்மளித்துள்ளார் மோடி.
மகராஷ்டிராவின் சிவசேனா, பிஹாரின் மற்றொரு கட்சியான லோக் ஜன சக்தி மற்றும் பஞ்சாபின் அகாலி தளம் ஆகியவைகளுக்கும் தலா ஒரு பதவி அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜேடியூ இதுபோல் மறுத்து இரண்டு கேபினேட், ஒரு இணை அமைச்சர் பதவிகளை கேட்டிருந்தது.
இதற்காக பாஜக தலைவர் அமித்ஷாவுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜேடியூவின் தலைவர் நிதிஷ்குமார் ஏற்கவில்லை. ஒரு கேபினேட் பதவியுடன் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்து விட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நிதிஷ் கூறும்போது, ‘ஒரே ஒரு பதவி என்பது பெயரளவிற்கு இருக்கும் என்பதால் அதை ஏற்க மறுத்துள்ளோம். ஒரு நல்ல கூட்டணியாக பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடி நடத்திய தேநீர் விருந்தில் ஜேடியூவின் 16 எம்பிக்கள் புறக்கணித்தனர். பிறகு நடந்த பதவி ஏற்பு விழாவில் நிதிஷ் பங்கேற்றார்.
18 எம்பிக்கள் பெற்ற சிவசேனாவிற்கும் ஒரே ஒரு கேபினேட் அளிக்கப்பட்டிருப்பதாக பாஜக நியாயப்படுத்துகிறது. ஆனால், தம்மை விட மிகக்குறைவாக வெறும் ஆறு எம்பிக்கள் பெற்ற ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபிக்கு ஒரு கேபினேட் அளித்த போது, தனக்கு கூடுதலாக அளிக்கலாம் என்பது நிதிஷின் வாதமாக உள்ளது.
பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்யும் கட்சி ஜேடியூ. என் டிஏவின் பழைய கூட்டணியான இது, கடந்த 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து என்டிஏவில் இருந்து வெளியேறியது.
2015 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் அமைத்த மெகா கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து மெகா கூட்டணியில் இருந்து வெளியேறியது.
பிறகு மீண்டும் என்டிஏவுடன் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. இந்தமுறையும் பிஹாரில் வீசிய மோடி அலையால் பிஹாரின் 2020 சட்டப்பேரவைக்கு தனித்து போட்டியிடவும் அம்மாநில பாஜக தன் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT