Last Updated : 30 May, 2019 04:59 PM

 

Published : 30 May 2019 04:59 PM
Last Updated : 30 May 2019 04:59 PM

ஆந்திராவை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டியே ஆளவேண்டும்: சந்திரசேகர ராவ் வாழ்த்து

ஆந்திராவை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டியே ஆளவேண்டும்  என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மறுசீரமைக்கப்பட்ட ஆந்திராவின் 2-வது முதல்வராகப் பதவியேற்றார்.

விஜயவாடாவின் இந்திரா காந்தி திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் நரசிம்மன், ஜெகன் மோகன் ரெட்டிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழா முடிந்த பின்னர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:

''ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் இள வயதுக்காரர். ஆனால் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவரின் ஆட்சிக்காலத்தில் ஆந்திர மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். பரஸ்பர புரிதலுடன் இரண்டு தெலுங்கு மாநிலங்களும் வளர்ச்சியை எட்டும்.

ஆந்திரப் பிரதேச அரசு கோதாவரி நீரை 100 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம். கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீட்டில் சில பிரச்சினைகள் உள்ளன, அதைச் சரியாக்க தெலங்கானா மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். ஆந்திர மக்கள் ஜெகனுக்கு நல்லதொரு வாய்ப்பை அளித்துள்ளார்கள். அவரின் ஆட்சிக்காலம் அடுத்த 4 தேர்தல்களுக்கு (20 ஆண்டுகள்) தொடர வேண்டும்''.

இவ்வாறு பேசினார் சந்திரசேகர ராவ்.

மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையைப் பெற்றது. முன்னாள் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு உடனான மோதலை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்திர சேகர ராவ் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x