Published : 23 May 2019 12:00 AM
Last Updated : 23 May 2019 12:00 AM
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை அறிய ஆந்திர மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இங்கு அரசியல் அனுபவமிக்க சந்திரபாபு நாயுடு தேசிய அளவிலும் முக்கியத் தலைவராகத் திகழ்கிறார். இவர் தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்துள்ளார்.
இவருக்கு தற்போது, மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடும் போட்டியாளராக விளங்குகிறார். அதிரடி அரசிய லுக்கு பெயர்பெற்ற இவர் தேர்தல் களத்தில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார். பல் வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி யுள்ள இவர், எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள், ஆந்திராவின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுகிறேன் என முழக்கமிட்டார்.
இதனால் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திவிட்டு, ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
நடிகர் பவன் கல்யாண் தொடங்கிய புதிய கட்சியான ஜனசேனாவின் எதிர்காலத்தையும் இந்ததேர்தல் தீர்மானிக்க உள்ளது. எனவே தேர்தல் முடிவு குறித்து மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனிடையே ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வாக்கு எண்ணும் பணியில் 6,745 அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT