Last Updated : 29 May, 2019 12:00 AM

 

Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸுடன் சரத் பவார் கட்சி இணையுமா?

குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெறாத நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை காங்கிரஸ் மீண்டும் இழந்துள்ளது. அக்கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இணைவதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்ற யோசனை அதன் தலைமையிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளிடம் நீண்ட பிரதமர் வேட்பாளர் பட்டியல் இருந்தது. இதில், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவாரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றுமுறை முதல்வராக இருந்த சரத்பவார் அதற்காக தனிப்பட்ட முறையில் அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஆதரவு தேடி வந்தார். இதற்காக காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்து விடவும் சரத்பவார் திட்டமிட்டிருந்தார்.

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) 353 இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனியாக 303 தொகுதி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி(யுபிஏ) 91 இடங்களை மட்டுமே பெற்றது. இதிலும் காங்கிரஸ் வெறும் 52 தொகுதி மட்டுமே பெற்றது.

எனவே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை, தம்முடன் இணைந்தால் அதன் எம்.பி.க்கள் எண்ணிக்கை 55-க்கும் அதிகமாகி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்ற யோசனை எழுந்துள்ளது. இது, காங்கிரஸ் தலைமையின் முன் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு உகந்தவராக இருக்கும் சரத் பவாரின் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன், மக்களவையிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தன.

மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட சரத் பவாருக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி கண்டது. பவாரின் எம்.பி.க்கள் இணைந்தால் காங்கிரஸின் எண்ணிக்கை மக்களவையில் 57 என அதிகரித்து எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். இத்துடன் சரத்பவாருக்கும் காங்கிரஸின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

எனினும், காங்கிரஸின் இந்த யோசனைக்கு சரத்பவார் ஒப்புக்கொள்ள மாட்டார் எனக் கருதப்படுகிறது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிராவில் நன்கு வளர்த்து உள்ளார் பவார். எனவே, அவர் காங்கிரஸுடன் தன் கட்சியை சேர்ப்பது கடினம் என பவார் கட்சியினர் கூறுகின்றனர்.

சுயேச்சைகளாக கர்நாடகாவில் நடிகை சுமலதா, மகாராஷ்டிராவில் நவ்நீத் ரவி ராணா, அசாமில் நம்பா குமார் சரணியா மற்றும் தாத்ரா நாகர் ஹவேலியில் மோஹன் பாய் டெல்கர் ஆகியோர் உள்ளனர். அவர்களது ஆதரவைப் பெறவும் காங்கிரஸ் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x