Published : 09 May 2019 10:31 AM
Last Updated : 09 May 2019 10:31 AM
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை கடைபிடிக்குமேயானால் அங்கு செல்லும் நதி நீரை தடுத்து நிறுத்துவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பேசிய கட்கரி, "சிந்து, ஜீலம், செனாப் நதிகளிலிருந்தே பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்கிறது.
ஒருவேளை பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து தீவிரவாத முகாம்கள் இயங்குவதை தடுக்காவிட்டால் நிச்சயமாக இந்த தண்ணீரை தடுப்பது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்கும்.
சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஏனெனில் இருநாடுகளுக்கும் இடையே அமைதியான நல்லுறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியே இல்லை.
இந்திய அரசு இந்த முடிவை தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானும் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவுக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அந்தத் தண்ணீர் ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்" என்றார்.
ஏற்கெனவே புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பேசியபோதும் கட்கரி இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தத்தின் ஆன்மாவை சிதைத்துவிட்டது. என்னிடம் என் மக்கள் இஸ்லாமாபாத்துக்கு ஒரு துளி தண்ணீர்கூட கொடுக்க வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
ஒப்பந்தத்தின் அம்சங்கள்:
இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT