Published : 11 May 2019 12:00 AM
Last Updated : 11 May 2019 12:00 AM
கடந்த மே 4-ம் தேதி டெல்லியின் மோதி நகரில் முதல்வர் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்த போது ஒருவர் அவரை திடீர் என கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தில் மறுநாள் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியான சுரேஷ் சவுகான்(33) எனத் தெரியவந்தது.
ஆனால், சுரேஷ் பாஜகவின் ஆதரவாளர் எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்றும் புகார் கூறி இருந்தார். இதை மறுக்கும் வகையில் டெல்லி போலீஸார் சுரேஷ் கலந்துகொண்ட ஆம் ஆத்மியின் கூட்டங்கள் வீடியோ பதிவுகளை வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலிடம் மன்னிப்பு கேட்க சுரேஷ் தயாரானதால் அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனத்திடம் சுரேஷ் கூறும்போது, ‘அன்று இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. அவரை நான் ஏன் அறைந்தேன் என்றும் புரியவில்லை. இதற்காக கைதாகி நான் சிறையில் இருந்தபோது அவரை அறைந்ததற்காக வருந்தினேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை எனவும்,இந்த தாக்குதலை செய்ய எவரும் தன்னை தூண்டவில்லை என்றும் சுரேஷ் கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து மே 4-ம் தேதி ட்வீட் செய்திருந்த துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ‘பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் கேஜ்ரிவால் கொலைசெய்யப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான கேஜ்ரிவால் இதுபோல் தாக்கப்படுவது முதன்முறையல்ல. 2014-ம் ஆண்டு முதன்முறையாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் கேஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்திருந்தார். அப்போதும் கேஜ்ரிவால் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அடுத்த சில வாரங்களில் வாரணாசி பிரச்சாரத்தின்போது அவர் மீது முட்டை வீசப்பட்டது. பிறகு வந்த டெல்லி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் அவரது அறையில் 2015-ம் ஆண்டு ஒருபெண் கேஜ்ரிவாலின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தாக்கியிருந்தார்.
2016-ல் செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது கேஜ்ரிவால் மீது ஓம் பிரகாஷ் சர்மா எனும் சமூக ஆர்வலர் காலணியை வீசினார். பஞ்சாபின் லூதியானாவில் பயணம் செய்த கேஜ்ரிவாலின் காரில் இரும்புக்கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படி கேஜ்ரிவால் மீது 9 முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் எந்த அரசியல் தலைவர் மீதும் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடந்ததில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT