Published : 12 May 2019 04:12 PM
Last Updated : 12 May 2019 04:12 PM
உ.பி. மாநிலம் நொய்டாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில், ரூ.ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு மிகுந்த சூடோஎபிடிரைன்(pseudoephedrine) எனும் போதைப்பொருள் 1818 கிலோவை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(என்சிபி) கைப்பற்றியுள்ளனர்.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் தடுப்புபிரிவினர் நடத்திய மிகப்பெரிய ரெய்டு இதுவாகும். இந்த ரெய்டைத் தொடர்ந்து நைஜீரியாவைச் சேர்ந்த இருவரையும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வீடு ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. இந்த வீட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது என்று தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.
இது குறித்து என்சிபி மண்டல இயக்குநர் மாதவ் சிங் கூறுகையில், " கடந்த 3 ஆண்டுகளில் சூடோஎபிட்ரின் நாட்டிலேயே நாங்கள் நடத்திய ரெய்டில் அதிக மதிப்பு வாய்ந்த பொருட்களும் இதுதான்.
மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்பு படையினர் டெல்லி விமான நிலையத்தில் சோதனையில் இருந்தபோது, ஜோகனஸ்பர்க்கில் இருந்து துபாய் வழியாக டெல்லி வந்த தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதான பெண் பயணி நாம்சா லுடாலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 24.700 கிலோ சூடோஎபிட்ரின் போதை மருந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த போதை மருந்தை நைஜீரியாவைச் சேர்ந்த இருவரிடம் ஒப்படைக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக நல்ல பணம் கொடுப்பதாகக் கூறினார்கள் என்றார்.
இவர் அளித்த தகவலின்பெயரில் செக்டர் 28 பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹென்ரி இடியோபோர்(வயது 35), சிமான்டோ ஒகாரோ(30) ஆகிய இருவரை கைது செய்தோம். இந்த சோதனையின் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் 1,818 கிலோ சூடோஎபிடிரைன் போதை மருந்து, 1.900 கிலோ கோக்கைன் போதை மருந்து ஆகியவை இருப்பதைக் கண்டுபிடித்தோம். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 1000 கோடிக்கும் அதிகமாகும்.
பல்வேறு இடங்களில் இருந்து சூடோஎபிட்ரின்ன் போதை மருந்தை கொண்டுவந்து, மருந்து தயாரிக்கிறார்கள். போலியாக ஹெராயின் தயாரித்து நாட்டில் இருந்து கடத்தவும் செய்கிறார்கள். இந்த மருந்துகள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கின்றன. கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இங்கு வசித்து வந்துள்ளார்கள். இந்த வீடு ஐபிஎஸ் அதிகாரி தேவேந்திர பாண்டேவுக்கு சொந்தமானது. இவர் லக்னோவில் பொருளாதார குற்றப்ப்பிரிவில் பணியாற்றி வருகிறார் " எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி பாண்டேயிடம் தொலைபேசி மூலம் கேட்டபோது, " நான் எனது வீட்டை தரகர் மூலம் வாடகைக்கு விட்டிருந்தேன். இதுபோன்ற தொழிற்சாலை செயல்படுவது எனக்கு தெரியாது. இதுவரை எனக்கு எந்தபுகாரும் வந்ததில்லை. இதுகுறித்து உடனடியாக இரு நைஜீரியா நாட்டவர் மீதும் புகார் அளிப்பேன். என்னுடைய வாடகை ஒப்பந்த பத்திரத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயலுக்கும் வீட்டின் வாடகை தாரரே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளேன் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT