Published : 18 Apr 2019 11:03 AM
Last Updated : 18 Apr 2019 11:03 AM
இந்தியாவின் தேர்தல் நாடி என்று கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகர் தர்மேந்திராவின் மனைவி நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
அங்கு வீடு விடாகச் செல்வது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கேயுரிய ‘ஸ்டண்ட்’களில் ஹேமமாலினி பிரச்சாரத்தின்போது ஈடுபட்டு வந்தார்.
இங்கு அவர் முதன் முதலாக கோவர்த்தன் ஷேத்ராவில் பிரச்சாரத்தைத் தொடங்கிய பொது களத்தில் வேலை செய்து வந்த பெண் விவசாயி ஒருவரின் விவசாய உற்பத்திக் கட்டை தான் கையில் ஏந்தி அவருக்கு உதவியதை போட்டோ எடுத்து தன் ட்விட்டரில் பகிர்ந்தார்.
இவையெல்லாம் ஸ்டண்ட் என்றாலும் ஒரு முன்னாள் புகழ்பெற்ற நடிகை தன் அருகே வந்து தன் கட்டுக்களை சுமக்கிறார் என்றால் எந்தப் பெண்ணுக்குமே பெருமையாக இருப்பதில் வியப்பில்லை.
ஆனால் இதனை ஸ்டண்ட் என்று வர்ணிக்கிறார் உ.பி. பனிகவான் கிராமத்தைச் சேர்ந்த பல்பிர் சவுத்ரி என்ற விவசாயி. இவர் கட்சி சார்பு எதுவும் இல்லாதவர், உருளைக்கிழங்கு விவசாயி.
2014-ல் மோடிதான் வர வேண்டும் என்று வாக்களித்தவர் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒன்றும் பயனில்லாமல் போனது குறித்து கடும் விமர்சனங்களைக் கொண்டவர். இவர் இருக்கும் தொகுதியில்தான் ஹேமமாலினி போட்டியிடுகிறார். பல்பிர் சவுத்ரிக்கு உருளைக்கிழங்கு பயிரில் ஏகப்பட்ட நஷ்டம், “எங்கள் உருளைக் கிழங்குகளை அரசு வாங்கத் தயாராக இல்லை அனைத்தும் அழுகிப்போய்விட்டன” என்று பாஜக மீது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இவர் ஹேமமாலினியின் ஸ்டண்ட்களை விமர்சிக்கும் போது, “மாலினியால் ஒன்றும் செய்ய முடியாது. கோவர்தனில் இவர் பெண் விவசாயி ஒருவரின் பயிர்களைச் சுமந்து சென்றதாக போட்டோ போட்டுக் கொள்கிறார். ஆனால் இன்னொரு கிராமப் பெண் ஹேமமாலினிக்கு பெரிய சால்வைப் போர்த்த அருகில் வந்தார், ஆனால் ஹேமமாலினி காரிலிருந்து கூட இறங்கவில்லை. ஏன் நாங்கள் நாற்றமடிக்கிறோமா?” என்று சாடினார்.
பாலகோட் தாக்குதல் பற்றி இவர், கூறும்போது, “அவர்கள் மக்களிடம் பொய் கூறி திசைதிருப்புகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT