Published : 19 Apr 2019 03:46 PM
Last Updated : 19 Apr 2019 03:46 PM
பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸிலிருந்து விலகியுள்ளதற்கு அக்கட்சி ஒரு மூழ்கும் கப்பல் போல் இருப்பதுதான் காரணம், என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஷாநவாஸ் ஹுசைன், புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் போன்று உள்ளது. அக்கட்சியை சேர்ந்தவர்களே அதை விட்டு விலகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சிக்கு பயம்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மோடியின் அலை நாடு முழுவதும் பரவியுள்ளதையே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தெரிவிக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும் இது தெரிந்திருக்கிறது. இல்லையெனில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் மாயாவதியும் முலாயம் சிங் யாதவ்வும் மீண்டும் ஏன் ஒரே மேடையில் இணையத் தொடங்கியுள்ளார்கள்?
மாயாவதியை ஒருமுறை கொல்லவே திட்டமிட்டவர்தான் இந்த முலாயம் சிங் யாதவ். இப்போது தங்களுக்குள் எந்தவகையான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஒன்றாக அணி திரண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகின்றனர். இன்னும் கேட்டால் ஒருவரையொருவர் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் என்று சதா குற்றம்சாட்டிக்கொண்டிருந்தவர்கள் இப்போது ஒன்றாக இணைந்து வருகிறார்கள் என்றால் காரணம் தேர்தலில் மோடி அலை வீசுவதைப் பார்த்து அவர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள் என்பதுதான்.
சத்ருகன் சின்ஹா
சமீப காலம் வரை பாஜகவில் இருந்தவர் சத்ருகன் சின்ஹா, சமீபத்தில்தான் காங்கிரஸில் இணைந்துள்ளார். இவரது மனைவி பூனம் சின்ஹாவோ சமாஜ்வாதியில் இணைந்து தேர்தலிலும் நிற்கிறார். இப்போது சத்ருகன் லக்னோவில் தனது மனைவியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறார்.
கொடுமை என்னவென்றால் லக்னோவில் காங்கிரஸ் வேட்பாளர் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் சத்ருகன் சின்ஹாவோ சமாஜ்வாதி கட்சித் தலைவரை ஆதரித்து புகழ்ந்து பேசிவருகிறார். இதுதான் எதிர்க்கட்சிகளின் நிலைமை.
காஷ்மீரிலும் வெற்றி
நான் காஷ்மீரில் அனந்தநாக் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதுதான் பார்த்தேன். பங்கு பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்ததை. காஷ்மீரிலும் உறுதியாக பாஜக வெல்கிறது.
இவ்வாறு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT