Published : 15 Apr 2019 03:56 PM
Last Updated : 15 Apr 2019 03:56 PM
நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானை எப்போதும் விமர்சிப்பதை விடுத்து இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள் என உத்தரப் பிரதேச பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரியில் காங்கிரஸ் வேட்பாளார் ராஜ் பப்பாரை ஆதரித்து இன்று (திங்கள்கிழமை) வாக்குகள் சேகரித்தார் பிரியங்கா.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாரதி ஜனதா கட்சி உண்மையிலேயே தேசியவாத கொள்கை கொண்டிருந்தால் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய சுதந்திர போராட்டத் தியாகிகளை அவமதிக்காமல் இருக்கட்டும். தேசத்துக்காக உயிர் நீத்த வீரர்கள் இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் ஒரே அளவில் மரியாதை செய்ய வேண்டும்.
தேசியவாதமே தனது கொள்கை என்றால் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவினர் பாகிஸ்தானை விமர்சிப்பதைவிட்டு இந்தியாவுக்காக இங்குள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக என்ன செய்தது செய்யவுள்ளது என்பதைப் பற்றி பேசட்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரண்ட விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். வெறுங் கால்களுடன் பேரணியாக வந்த அவர்கள் கோரிக்கைக்கு எப்போதாவது இந்த அரசு செவி சாய்த்ததா? இந்த அரசு தேசியவாத அரசு என்றால் ஏன் இங்கு மதங்களின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. மதவெறிக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு செல்லாமல் கொலையாளிகளை ஏன் அரசாங்கம் கவுரவித்தது.
இந்த அரசாங்கம் அதன் ஜனநாயகத்தின் மாண்பை நினைத்து பெருமைப்படவும் இல்லை நம் தேசத்தின் மக்களை நினைத்தும் பெருமைப்படவில்லை. இது உண்மையான தேசியவாதமாக இருந்திருந்தால் உண்மையில் வழியல்லவா சென்றிருக்கும்.
நான் இந்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ஆனால் கட்சி விளம்பரங்களில் மட்டும் பாஜகவினர் வளர்ச்சியைப் பற்றி கதைகள் சொல்கின்றனர். மக்களுக்கு இந்த போலி கதை பின்னணியெல்லாம் நன்றாகத் தெரியும்.
ஒருவேளை அதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டுவிட்டால் உடனே அவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்திவிடுவார்கள்.
உண்மையிலேயே நீங்கள் தேசியவாதி என்றால் பாகிஸ்தானை எப்போதும் விமர்சிப்பதை விடுத்து இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு விவசாயிகளுக்கு ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரியங்கா காந்தி உ.பி. கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT