Published : 11 Apr 2019 08:43 AM
Last Updated : 11 Apr 2019 08:43 AM
பிஹார் மக்களவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் 2 தொகுதிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதவுள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு), லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றுக்கு எதிராகராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விஐபி ஆகிய கட்சிகள் இருக்கின்றன.
பிஹாரில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜகவை எதிர்க்கிறது. இதில், பாட்னா சாஹேப் தொகுதியும், சாசாராம் தொகுதியும் அடங்கும். மற்ற ஆறு தொகுதிகளிலும் ஜேடியுடன் காங்கிரஸ் மோதுகிறது. இதற்கு, பாஜக தமது பல தொகுதிகளை ஜேடியுவுக்கு அளித்திருப்பதும் காரணமாக உள்ளது.
இதேபோல், பிஹாரில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்கள் கிடைப்பதும் சிக்கலாக இருந்துள்ளது. ஒருகாலத்தில், பிஹாரின் 40 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. ஆனால், இந்த முறை, தமக்கு கிடைத்த 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காத நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
தங்கள் கட்சியில் வேட்பாளர்கள் கிடைக்காததால், வெளியில் இருந்து வந்தவர்களில் 4 பேரை தமது வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக எம்.பி.யான பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, முன்னாள் எம்.பி. உதய்சிங் பப்பு ஆகியோர் காங்கிரஸில் இணைந்து போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸில் இருந்து வெளியேறிய தாரீக் அன்வர், காங்கிரஸில் இணைந்து போட்டியிடுகிறார். பிஹாரின் அனந்த்சிங்கின் மனைவி நீலம் சிங்குக்கும் காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்தமுறை ஆர்ஜேடியில் வென்ற பப்பு யாதவ், இந்தமுறை தனது ஜன அதிகார் கட்சியில் போட்டியிடுகிறார். இவரது மனைவியும் காங்கிரஸ் எம்.பி.யுமான ரஞ்சிதா ரஞ்சனை சுபோலில் மட்டும் ஆர்ஜேடி எதிர்க்கிறது. அங்கு காங்கிரஸை ஆதரிக்காமல் ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கிறது.
பல்வேறு முக்கியத்துவங்கள்இந்நிலையில், பிஹார் மக்களவைத் தேர்தல் பல்வேறு முக்கியத்துவங்களை கொண்டுள்ளது. கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறைபட்டதால் முதன்முறையாக இந்த தேர்தலில் லாலு இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வந்த பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் அவரை அப்பதவியில் அமரவைக்கப் பிரச்சாரம் செய்கிறார். இவரை எதிர்த்து முதன்முறையாக தனது பலத்தை காட்டி வருகிறார் லாலுவின் மகனான தேஜஸ்வி பிரசாத் யாதவ்.
தமது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள, இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகின்றன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான கன்னையா குமாரின் வெற்றி பேகுசராய் தொகுதியில் ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. பிஹாரில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நான்கு தொகுதிகளில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT