Published : 26 Apr 2019 04:18 PM
Last Updated : 26 Apr 2019 04:18 PM
வாரணாசிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடியிடம் ஏராளமான மக்கள் கூட்டத்தைக் கடந்து வந்து ஒரு பெண் தன் தந்தையைக் காப்பாற்ற உதவி கோரினார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று வாரணாசிக்கு வந்திருந்தார்.
அங்கு நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குழுமியிருந்தனர். மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அவர்களிடம் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இதற்கிடையில் கூட்டத்தினரை தள்ளிக்கொண்டு ஆர்வத்துடன் ஒரு பெண் வந்துகொண்டிருப்பதை மோடி கவனித்தார். உடனே தன்னைச் சுற்றியிருந்த சிறப்புப் பாதுகாப்பு படையினரை அழைத்து சற்றுத் தொலைவிலிருந்த அப்பெண்ணிடம் ''என்னவென்று விசாரியுங்கள்'' என்று கேட்டார்.
அப் பெண் பெயர் ஜோதி, வாரணாசியைச் சேர்ந்த இவர் தனது தந்தையை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு கோரிக்கையையை கடிதமாக எழுதிக்கொண்டு வந்திருந்தார்.
இதுதான் சமயம் என்று உடனே ஜோதி, தன் கையிலிருந்து கடிதத்தை சிறப்புக் காவலரிடம் கொடுத்தார். அதை பிரதமரிடம் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய ஜோதி, ''என் தந்தை ஒரு தவறான வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு அப்பாவி'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறிய விவரம்:
''என் தந்தையை சிறையிலிருந்து விடுவிக்க நான் பிரதமர் மோடியை சந்தித்து உதவிபெறவே இங்கு வந்தேன். என் தந்தை எந்தக் குற்றமும் புரியவில்லை. அவர்
ஒரு அப்பாவி. 35 வருடங்களுக்கு முன்பு என் தந்தை ஒரு பெண்ணை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு ஓராண்டுக்குப் பின் அப் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணம் என் தந்தைதான் என்று கூறி பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இவ்வழக்கில் என் தந்தை எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் தண்டனை அளிக்கப்பட்டது. இதனால் அவர் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் 4 பேர் உடன்பிறந்தவர்கள் என் தாயுடன் ஒன்றாக வசித்துவருகிறோம். என் தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு வேறு யாரும் உறவினர்களும் இல்லை. எங்கள் படிப்பைக் கூட தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எங்கள் தாய்க்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டால் எங்களைக் காப்பாற்றக்கூட ஒருவரும் இலலை.'' என்றார்.
ஜோதி தன் தந்தையை விடுவிக்கக் கோரி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் ஒரு கடிதம் அளித்துள்ளது குறித்து தெரிவிக்கையில், ''ஒரு வாரத்துக்கு முன்பு, அவர் வாரணாசி, சங்கத் மோச்சான் கோவிலுக்கு வருகை தந்த முதல்வரிடம் என் நிலையை எடுத்துக்கூறி கடிதம் அளித்தேன்.
அனைத்து சாத்தியமான வகையிலும் உதவி செய்வதாகமதவும் முதல்வர் உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இப்பிரச்சினையில் உதவி கோரும் மனுவை பிரதமர் மோடியிடம் அளிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது ஒருவகையில் மகிழ்ச்சியாக உள்ளது.'' என்ற ஜோதியின் கண்களில் நம்பிக்கை மிளிர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT