Last Updated : 19 Apr, 2019 11:04 AM

 

Published : 19 Apr 2019 11:04 AM
Last Updated : 19 Apr 2019 11:04 AM

லக்னோவில் வெளி வேட்பாளரை நிறுத்தியதால் உ.பி காங்கிரஸார் அதிருப்தி

உபியின் லக்னோவில் வெளிமாவட்ட வேட்பாளரை நிறுத்தியதால் தம் கட்சி மீது காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர். இங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் போட்டியிடுகிறார்.

உபியின் தலைநகரான லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991 முதல் தொடர்ந்து போட்டியிட்டு ஐந்து முறை வென்றிருந்தார். வாஜ்பாய்க்கு பின் பாஜகவில் லால்ஜி டண்டண் 2009-ல் போட்டியிட்டு வென்றார்.

2014-ல் போட்டியிட்டு வென்ற ராஜ்நாத் லக்னோவில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவியான பூனம் சின்ஹா போட்டியிடுகிறார்.

இவர் நேற்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரது கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.

உபியில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் தன் சார்பில் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாமை நிறுத்தியுள்ளது. இவர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது உபி காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம், கிருஷ்ணாமின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் மாலை 8.00 மணிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு பெரும்பாலான காங்கிரஸார் வராமல் புறக்கணித்தனர். 

அதேநாளில், ராஜ்நாத்தை லக்னோவில் மாபெரும் ஊர்வலமாக பிரச்சாரம் செய்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பல பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும், இதை தவிர்க்க ஆச்சார்யா எளிமையாக வேட்புமனு தாக்கல் செய்வார் என அவரது ஆதரவாளர்கள் வாட்ஸ் அப்பில் தகவலை பரப்பினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள சீலாம்பூர் விடுதியில் தங்கியுள்ள பிரமோத் கிருஷ்ணாம், எளிமையாக நடந்து சென்று மனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இதன் பின்னணியில் உ.பி காங்கிரஸார் ஆதரவில்லாததால் ஆச்சார்யா வேறுவழியின்றி எளிமையை விரும்பியதாகக் கூறப்படுகிறது. தான் கூறியபடியே ஆச்சார்யா தங்கிய விடுதியில் இருந்து சுமார் ஒரு ஆயிரம் பேர்களுடன் சாலை ஓரமாக நடந்து சென்று மனுதாக்கல் செய்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் லக்னோவின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘இந்தமுறை லக்னோவை சேர்ந்தவரையே நிறுத்துவதாக பிரியங்கா உறுதி கூறி ஏமாற்றி விட்டார். மற்ற சில தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு அளித்தது போல், பூனம் சின்ஹாவிற்கு ஆதரவளித்திருக்கலாம். பூனமை விட ஆச்சார்யாவிற்கு குறைந்த வாக்குகள் கிடைக்கும் நிலையால் நாம் அதிருப்தி அடைந்துள்ளோம்.’ எனத் தெரிவித்தனர்.

பூனமை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என காங்கிரஸிடம் சமாஜ்வாதி கோரியிருந்தது. இதை ஏற்காத காங்கிரஸ், லக்னோவில் அதிகமுள்ள உயர் சமூகத்தினர் வாக்குகளை குறிவைத்து ஆச்சார்யாவை நிறுத்தி விட்டது.

பாஜகவின் சாதுக்களுக்கு கடந்த ஆறுவருடங்களாக காங்கிரஸ் சார்பில் பதிலடி கொடுத்து வருபவர் இந்த ஆச்சார்யா. அரசியல் பாடப்பிரிவில் பட்டமேற்படிப்பு பயின்றவர் சாதுவாக மாறி காங்கிரஸில் இணைந்து விட்டார்.

காங்கிரஸின் ஒரே சாது வேட்பாளர்

இவர், உபியின் சம்பல் தொகுதியில் கல்கி தாம் எனும் பெயரிலான ஆசிரமத்தின் தலைவராகவும் உள்ளார். பாஜக சார்பில் பல்வேறு சாதுக்கள் மீண்டும் போட்டியிட, காங்கிரஸில் நிறுத்தப்பட்டுள்ள ஒரே சாது இந்த ஆச்சார்யா. இவரது மனுதாக்கலின் போது சுமார் 500 சாதுக்களும் உடன் இருந்தனர்.

லக்னோவில் காங்கிரஸ் சார்பில் 2014 தேர்தலில் ரீட்டா பகுகுணா ஜோஷி போட்டியிட்டு 2,88,357 வாக்குகளுடன் இரண்டாவதாக வந்திருந்தார். உபி மாநில அமைச்சரான இவர் அலகாபாத்தில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.-19-04-201

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x