Last Updated : 05 Apr, 2019 06:56 PM

 

Published : 05 Apr 2019 06:56 PM
Last Updated : 05 Apr 2019 06:56 PM

காங்கிரஸ்-என்சிபி கூட்டணிக்கு பிரச்சாரம் செய்கிறார் ராஜ் தாக்கரே

சிவசேனாவில் இருந்து பிரிந்து மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா எனும் தனிக்கட்சி தொடங்கியவர் ராஜ் தாக்கரே. இந்துத்துவா தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், மகாராஷ்டிராவின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணியின் நட்சத்திரப் பிரச்சாகராக உள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக தமிழர்களை எதிர்த்து முதன் முறையாக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே. இவரது சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவில் சுமார் 12 வருடங்களாக அவருக்கு நெருக்கமாக இருந்தார்.

ஆனால், பால் தாக்கரே தன்னைத் தவிர்த்து தனது சொந்த மகனான உத்தவ் தாக்கரேவுக்கு முக்கியப் பதவி கொடுத்ததால் அவருடன் ராஜ் தாக்கரேவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், சிவசேனாவை விட்டு வெளியேறினார் ராஜ்.

தொடர்ந்து தம்மை இந்துத்துவா தலைவராகக் காட்டிக்கொண்டவர், கடந்த 2005-ல், ‘மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா(எம்.என்.எஸ்) என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். 2009 சட்டப்பேரவையில் அவருக்கு 13 எம்எல்ஏக்கள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை அடுத்த 2014 தேர்தலில் ஒன்றாகக் குறைந்தது. இதை எதிர்பார்த்ததாலோ, என்னவோ அவர் அதற்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த முறை மக்களவைக்கு சரத்பவாரின் என்சிபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் இணைந்திருந்த மெகா கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் ராஜ் தாக்கரேவை ஏற்க மறுத்தது. இதன் பின்னணியில் ராஜ் வடமாநிலத்தவர்களை மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்ற நடத்திய தாக்குதல் காரணமானது. எனவே, அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வேண்டுமானால் முயற்சிக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனால், காங்கிரஸ், என்சிபி கூட்டணிக்கு ஆதரவை மட்டும் அளித்த ராஜ் தாக்கரேவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. சட்டப்பேரவை நம்பிக்கையில் ராஜ், மெகா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ராஜ் தாக்கரே பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் காங்கிரஸின் வேட்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சரான மிலிந்த் தியோரா, நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரியான பிரியாதத், பாலிவுட் நடிகை ஊர்மிளா மண்டோகர், முன்னாள் முதல்வர்களான அசோக் சவான் மற்றும் சுசில்குமார் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

என்சிபியில் சரத்பவாரின் மகளான சுப்ரிய சுலேவும், அக்கட்சியின் மூத்த தலைவரான அஜீத் பவாரின் மகனான பார்த் பவார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பிரச்சார மேடைகளில் தனது கட்சியையும் வளர்த்த வேண்டிய நிலை ராஜ் தாக்கரேவுக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x