Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியிலிருந்து டெலிகான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 110 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நாளன்று, எதிர்க்கட்சியினர் பல குறுக்கு வழிகளை கையாண்டனர்.
முதலில் வாக்கு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை. மாற்று இயந்திரங்களை வரவழைத்து தேர்தல் நடத்த வலியுறுத்தினோம். பிறகு எதிர்க்கட்சியினர் வன்முறையில் இறங்கினர். சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி மக்களை பயமுறுத்தினர். வாக்கு இயந்திரங்கள் தேவையில்லை, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
மேலும் விவிபாட் கருவியின் 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும். இதற்கு அதிக நேரமாகும் என உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் தவறான தகவலை தெரிவித்துள்ளது. 21 கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டை ஆதரிக்கவில்லை. விரைவில் இதற்கு உச்ச நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு சந்திரபாபு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT