Published : 01 Apr 2019 03:51 PM
Last Updated : 01 Apr 2019 03:51 PM
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் உருவாக முக்கியக் காரணகர்த்தாக்களில் ஒருவர் கல்வகுந்தலா சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்). அந்த வகையில் தெலங்கானாவையும் கேசிஆரையும் பிரித்துப் பார்க்க முடியாது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வைத்த தனி மாநிலம் எனும் கோரிக்கையை தொடர் போராட்டங்களாலும், பேச்சுவார்த்தை மூலமும் நனவாக்கிக் கொடுத்த கேசிஆர் மக்கள் மத்தியில் ஹீரோ. அதனால்தான் மக்கள் 2-வது முறையாக வெற்றியை அவருக்கு அள்ளிக் கொடுத்தனர்.
பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செய்து கொடுத்த நம்பிக்கையில் மக்களவைத் தேர்தலை கேசிஆர் எதிர்கொள்கிறார்.
என்டிஆர் விஸ்வாசி
காங்கிரஸ் கட்சியில் அரசியல் பழகினாலும், தெலுங்கு தேசம் கட்சியில்தான் அரசியல் அதிகாரங்களை அனுபவிக்கத் தொடங்கினார் கேசிஆர். 1983-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த கே.சிஆர். படிப்படியாக தன்னைக் கட்சியில் உயர்த்திக்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலில் கம்மம் தொகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டுவரை போட்டியிட்டு கேசிஆர் வென்றார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ராமா ராவின் அமைச்சரவையில் வறட்சி மற்றும் நிவாரணத்துறை அமைச்சராக கேசிஆர் இருந்தார். 1990களில் மேடக் மண்டலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கேசிஆர் இருந்தார்.
சந்திரபாபு நாயுடுவுடன் மனக்கசப்பு
என்டிஆர் மறைவுக்குப் பின் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதன்பின் துணை சபாநாயகராகவும் கேசிஆர் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தார்.
ஆனால், அதன் பின் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2001-ம் ஆண்டு கேசிஆர் விலகினார். தனி மாநிலம்தான் சரியான தீர்வு என்பத உணர்ந்து, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) எனும் கட்சியைத் தொடங்கி தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வலியுறுத்தினார்.
தனிக்கட்சி
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக டிஆர்எஸ் கட்சியினரும், ராயலசீமா மண்டல மக்களும், கேசிஆர் தலைமையில் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்தனர். கட்சி தொடங்கிய 60 நாட்களில் சித்திப்பேட்டை ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்ட டிஆர்எஸ் கட்சி நான்கில் ஒருபகுதி வாக்குகளை வென்று மக்கள் மத்தியில் வேர்பிடிக்கத் தொடங்கியது.
போராட்டம் தீவிரம்
டிஆர்எஸ் கட்சியின் கோரிக்கையை தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு உதவினால் தெலங்கானா மாநிலம் அமைக்க உதவுகிறோம் என்ற வாக்குறுதியில், கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வென்று, சந்திரசேகர் ராவ், பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அமைச்சரானார்.
ஆனால் தெலங்கானா மாநிலம் அமைக்காமல் மீண்டும் ஆந்திராவில் தேர்தலை நடத்தியது காங்கிரஸ் கட்சி. இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் ராவ் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து 2006-ம் ஆண்டு விலகி, தனி மாநிலம் கோரி போராட்டத்தை வலுப்படுத்தினார்.
2009-ம்ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து டிஆர்எஸ் கட்சி போட்டியிட்ட போதிலும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. மாறாக தெலங்கானா மாநிலத்தை வைத்து அரசியல் செய்த காங்கிரஸ் கட்சி ஏராளமான இடங்களில் வென்றது.
கேசிஆரின் கோரிக்கைக்கு செவி சாய்த்த பிரதமர் மன்மோகன் சிங் அரசு, கடந்த 2014-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஆந்திர மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியது. தங்களின் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் கேசிஆர் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார்.
தனி மாநிலம்
டிஆர்எஸ் கட்சி 11 இடங்களில் வென்றது. சட்டப்பேரவை தேர்தலிலும் 121 இடங்களில் 63 இடங்களை வென்று தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக கேசிஆர் பொறுப்பேற்றார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதியில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாகச் செயல்படத் தொடங்கியது.
5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் செய்த கேசிஆர் தன்னுடைய ஆட்சிக்காலம் முடியும் முன்பே சட்டப்பேரைவையைக் கலைத்து தேர்தலுக்குத் தயாரானார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறையாக வென்று 88 உறுப்பினர்கள் கொண்ட அசுரபலத்துடன் ஆட்சியில் கேசிஆர் தொடர்ந்து வருகிறார்.
டிஆர்எஸ்-க்கு வெற்றி வாய்ப்பு
தனி மாநிலமாகப் பிரிந்த பின் முதல் முறையாக மக்களவைத் தேர்தலை தெலங்கானா சந்திக்கிறது. மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் இந்த முறை குறைந்தபட்சம் 10 தொகுதிகள் அதிகபட்சமாக 16 தொகுதிகளை டிஆர்எஸ் கட்சி வெல்ல வாய்ப்புள்ளது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்குத் தடம் இல்லை
தெலங்கானாவைப் பொறுத்தவரை டிஆர்எஸ் கட்சிக்குப் போட்டியாக பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு தனது கட்சியை வலுப்படுத்தியுள்ளார் கேசிஆர். பாஜகவுக்கு இங்கு அடையாளமே இல்லை. மக்களைக் கவரவும், எந்தவிதமான தாக்கத்தையும் மோடியாலும், பாஜகவாலும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு சூழல் நிலவுகிறது.
அரசியல் எதிரிகள் இல்லை?
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கேசிஆர், தனது மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைப் படிப்படியாக அழித்து, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததாக மாற்றிவிட்டார்.
மக்களவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியின் செல்வாக்கைக் கண்டு தெலுங்கு தேசம் கட்சி சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனும் முடிவை எடுத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள், டிஆர்எஸ் கட்சிக்கு சென்றதால் கட்சியின் அடிநாதமே ஆட்டம் கண்டுள்ளது.
தன்னை வளர்த்துவிட்ட கட்சியை தனது அரசியல் சாணக்கியத்தனத்தால், மெல்ல மெல்லக் கரைத்து வருகிறார் கேசிஆர். அதேபோல காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், அதில் 8 பேர் டிஆர்எஸ் கட்சியின் பக்கம் சென்றுவிட்டனர். மாநிலத்தில் தன்னை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத அளவுக்கு விஸ்வரூமாக வளர்ந்து நிற்கிறார் கேசிஆர்.
இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே டிஆர்எஸ் கட்சிக்கு அரசியல் எதிரியாக இருந்தாலும், டிஆர்எஸ் கட்சியின் வெற்றியை பெரிய அளவுக்கு காங்கிரஸால் தடுத்துவிட முடியாது. ராகுல் காந்தியின் அலையால் அதிகபட்சம் 4 தொகுதிகளை காங்கிரஸ் வெல்ல சாத்தியம் உண்டு.
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்
மாநிலத்தில் அடுத்து வளர்ந்துவரும் சக்தியாக உருவெடுத்து வருபவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். காபு சமூகத்தினர் தெலங்கானாவில் அதிகம் என்பதால், காபு சமூகத்தைச் சேர்ந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு செல்வாக்கு உண்டு.
இந்த முறை, பவன் கல்யாண், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் ஆதரவுடன் களத்தில் இறங்குகிறார். காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் மோதும் தொகுதியில் வாக்குகளை ஜனசேனா பிரிக்கும் என்பதால், பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும், டிஆர்எஸ் கட்சிக்கும் அதிர்ச்சிகரமான முடிவுகள் வரலாம். ஆனால், டிஆர்எஸ் கட்சிக்கு எந்தவிதமான பெருத்த சேதத்தையும் ஏற்படுத்த இயலாது
பாஜக பி டீம்?
ஆனால், கேசிஆரை பாஜகவின் 'பி டீம்' என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், சட்டப்பேரவை காலம் முடியும் முன்பே கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ள மத்திய அரசு துணை புரிந்தது. மோடியுடன் சுமுகமான உறவு, முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்க்காமல் டிஆர்எஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தது போன்றவை வார்த்தையளவுக்கு மட்டுமே பாஜகவுடன் டிஆர்எஸ் எதிர்ப்புடன் இருப்பதைக் காண முடிகிறது. இதனால்தான் பாஜகவின் பி டீம் கேசிஆர் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிங் மேக்கராக மாறுவாரா?
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கின்றன. அவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தனக்குத் தேவையான ஆதாயங்களைக் கேட்டுப்பெற்று பாஜகவின் பக்கம் கேசிஆர் சாய்வதற்கும், வாய்ப்புள்ளது என்று ஒரு கருத்து இருக்கிறது.
கேசிஆரின் கரம் பாஜகவுக்கு மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சிக்கும்கூட நீளலாம். ஆனால், அது தேர்தல் முடிவைப் பொறுத்தே கேசிஆரின் சாணக்கியத்தன நகர்வுகள் இருக்கும்
கேசிஆர் வெற்றிக்குக் காரணம்
கடந்த 5 ஆண்டுகளாக தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு வளர்சிப் பணிகளை கேசிஆர் செய்துள்ளார். நாட்டிலேயே சிறந்த முதல்வர், முதலீட்டுக்கு சிறந்த மாநிலம், விவசாயிகளுக்கும், தொழில் துறைக்கும் 24 மணிநேர மின்சாரம், ஏழைகளுக்கு வீடுகள், பெரும் வரவேற்பைப் பெற்ற ரிதுபந்து திட்டம் உள்ளிட்டவை கேசிஆருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளன.
குறிப்பாக, ஒரு கோடி ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் மிஷன் காகத்திய திட்டம் செயல்படுத்தியது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஏழைகளுக்கு 2 படுக்கைகள் கொண்ட 2 பிஹெச்கே வீடு திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் ரிது பந்து திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கிய லட்சுமி திட்டம், முதியோருக்கான ஆசாரா ஓய்வூதியம், மிஷன் பகீரதா என ஏராளமான திட்டங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தெலங்கானா மாநிலத்தில் 4 மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமிக்கும் கிட்டங்கிகள் மட்டுமே இருந்தன. இவற்றை 24 மெட்ரிக் டன்னாக கேசிஆர் மாற்றியுள்ளார்.
நிர்வாகத்துக்கு எளிதாக 21 புதிய மாவட்டங்கள் உருவாக்கம். நாட்டிலேயே அதிகபட்சமாக 875 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தெலுங்கானாவில்தான்உள்ளன. தொழிற்சாலைக்கு 24 மணிநேரமும் மின்வசதி, சமூகநலத் திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள் என மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதால், 2-வது முறையாக கேசிஆர் முதல்வராகியுள்ளார்.
அதேசமயம் விளைபொருட்களுக்கு போதிய விலை எனக் கூறி நிஜாமாபாத் மண்டல மஞ்சள் விவசாயிகள் ஒருபுறம் போராடுகிறார்கள். மஞ்சள் வாரியத்தை அமைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், கேசிஆர் மகள் கவிதா எம்.பி.யை எதிர்த்து 170 விவசாயிகள் நிஜாமாபாத்தில் போட்டியிடுகின்றனர். மிகச்சிறிய அளவிலேயே அதிருப்தி இருந்தாலும் பெருவாரியான மக்கள் ஆதரவு கேசிஆருக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT