Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது.
புதிய வாக்காளர்கள் சுமார் 10 லட்சம் பேர் இம்முறை சேர்க்கப்பட்டிருந்ததால் காலை 6 மணி முதலே வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் 31 சதவீத இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பல வாக்குச் சாவடிகளில் மதியம் 1 மணிக்கு கூட வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் மக்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்து தங்களது வீடு மற்றும் அலுவலகம் சென்று விட்டனர்.
மேலும் சில மாவட்டங்களில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். சபாநாயகர் கோடல சிவப்பிரசாத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. சந்திரகிரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சில இடங்களில் வாக்களிக்கப்பட்ட சின்னத்திற்கு பதில் வேறொரு வேட்பாளருக்கு வாக்கு பதிவானது. இந்த குழப்பத்தால் சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கீழே போட்டு உடைக்கப்பட்டன. இதனால் மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
மேலும், தாமதமாக தொடங்கிய 726 வாக்கு சாவடிகளில் நேரம் குறிப்பிடாமல் வாக்களிக்க வாய்ப்பும் அளிக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணி வரை 256, 10.30 மணி வரை 139, 11 மணி வரை 70, 11.30 மணி வரை 49, 12 மணி வரை 23, 12.30 மணியிலிருந்து அதிகாலை 3.30 மணி வரை 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலத்தில் 71.43 சதவீத வாக்குகள் பதிவாயின. தற்போது ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 76.69 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பதிவு நடந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரகுவீரா ரெட்டி அனந்தபூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்று வாக்குப் பதிவு எப்போதும் நடைபெற்றதில்லை. இவ்வளவு மோசமாகவா ஒரு நாட்டின் தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் ? ஒரு மாநிலத்தில் 2 நாட்களாக தொடர்ந்து தேர்தல் நடத்தலாமா ? வாக்கு இயந்திரங்களில் இவ்வளவு கோளாறுகளை வைத்துக் கொண்டு எப்படி தேர்தல் நடத்தலாம் ? மின்சாரம் கூட இல்லாமல் வாக்குப்பதிவு நடத்துவதா ? ஜனநாயகத்தை இருட்டு அறையில் நிர்ணயிப்பதா ? இது குறித்து அனைத்து கட்சிகளும் போராட முன் வர வேண்டும்.
இவ்வாறு ரகுவீரா ரெட்டி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT