Last Updated : 14 Apr, 2019 04:15 PM

 

Published : 14 Apr 2019 04:15 PM
Last Updated : 14 Apr 2019 04:15 PM

உ.பி.யில் ஷிவ்பால்சிங் கட்சியில் முன்னாள் சம்பல் கொள்ளையன் மல்கான்சிங் போட்டி

வட மாநிலங்களின் சம்பல் காடுகளின் கொள்ளையனாக இருந்து சரணடைந்த மல்கான்சிங்(74) மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு உ.பி.யின் தவுரஹரா தொகுதியில் ஷிவ்பால்சிங் யாதவின் ஆர்எஸ்பிஎல் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

 

உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ள பகுதி சம்பல் காடுகள். புந்தேல்கண்ட் எனும் வறட்சிப்பிரதேசத்தில் ஒருகாலத்தில் கொள்ளைக்காரர்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.

 

கொள்ளையர்களிடம் பேசி சரணடைய வைக்க பல சமூக தலைவர்களும், அமைப்புகளும் பணியாற்றின. இவர்களில் ஒரு முயற்சியால் முதலில் சரணடைந்த முக்கிய கொள்ளையன் மல்கான்சிங்.

 

இவரது கொள்ளைக்கும்பலில் இருந்த பூலான் தேவியின் குருவாகக் கருதப்பட்டவர் மல்கான்சிங். இவர் மபி முதல்வராக இருந்த அர்ஜுன்சிங் முன்னிலையில் சுமார் 30,000 பொதுமக்களுக்கு முன்பாக கடந்த 1982-ல் சரணடைந்தவர்.

 

அப்போது முதல் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தேர்தல்களில் போட்டியிட முயன்றவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இந்தமுறை அவர் முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். உபியின் தவுரஹரா தொகுதியில் பிரகதீஷல் சமாஜ்வாதி கட்சி லோகியாவில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங்கின் சகோதரரான ஷிவ்பால் அதிலிருந்து விலகி புதிதாகத் துவங்கியக் கட்சி ஆகும்.

 

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மல்கான்சிங் கூறும்போது, ‘குஜராத்தின் மோடி வாரணாசியில் போட்டியிடுவது போல் நான் தவுரஹராவில் மோதுகிறேன். எனது போட்டி எங்கு இருப்பினும், உபியில் எனது சமூகமான

 

கன்கர் ராஜபுத்திரர்களின் சுமார் 55 லட்சம் வாக்குகள் பிஎஸ்பிஎல்-க்கு கிடைக்கும்.

 

இந்த வாய்ப்பை பாஜகவும், காங்கிரஸும் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டன. அன்று மக்கள் உரிமைக்கானப் புரட்சிக்காக துப்பாக்கி தூக்கியவன் இன்றும் அதே காரணத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன்.’ எனத் தெரிவித்தார்.

 

மபியின் ஷிவ்புரியில் வசித்து வரும் மல்கான்சிங், சம்பல் காடுகளின் பகுதியில் அமைந்துள்ள உபியின் பாந்தா தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அவர் காங்கிரஸில் இணைந்து கேட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

எனவே, ஷிவ்பால் கட்சி சார்பில் சம்பல் அல்லாத பகுதியான தவுரஹராவில் போட்டியிடுகிறார். இங்கு மல்கான்சிங்கால் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஎஸ்பிஎல் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டியாகி விட்டது.

 

தனது சரணுக்கு பின் பக்திமானாகி விட்ட மல்கான்சிங், சுமார் இருபது வருடங்களாக பாஜகவில் இருந்தார். 1970-களில் சம்பல் காடுகளின் முக்கியக் கொள்ளையனாக இருந்த போது மல்கான்சிங் மீது 17 கொலை வழக்குகள், 19 கொலை முயற்சி, 28 ஆள் கடத்தல் மற்றும் 18 கொள்ளை உள்ளிட்ட பல நூறு வழக்குகள் பதிவாகி இருந்தன.

 

இவரிடம் தற்போது அரசு உரிமம் பெற்ற துப்பாக்கி தற்காப்பிற்காக உள்ளது. ஒருகாலத்தில், உபியின் அரசியல் கட்சிகள் மல்கான்சிங் போன்ற சம்பல் கொள்ளையர்கள் உதவியால் சம்பல் பகுதிகளின் வாக்குகளை துப்பாக்கி முனைகளில் மிரட்டிப் பெற்று வந்தன.

 

தற்போது அவர்களை கொள்ளையடிப்பதை நிறுத்திய போதும், மல்கான்சிங் போன்ற, ’ஓய்வுபெற்ற கொள்ளையர்’களிடம் உதவி பெறுவதை அரசியல் கட்சிகளால் நிறுத்த முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x