Published : 09 Apr 2019 12:00 AM
Last Updated : 09 Apr 2019 12:00 AM
வடமாநில தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசு அலுவலர் அமைப்பாக 1981-ல் கன்ஷிராமால் தொடங்கப்பட்டது ‘தலித் சோஷித் சமாஜ் சங்கர்ஸ் சமிதி’. இதை 1984-ல் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார் கன்ஷிராம். 1995-ல் சமாஜ்வாதி ஆதரவுடன் உத்தர பிரதேச முதல் அமைச்சராக மாயாவதி பொறுப்பேற்றார். பிறகு, 1997 மற்றும் 2002-லும் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். 2007 தேர்தலில் பிஎஸ்பி முதன்முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றது. மாயாவதி மீண்டும் முதல்வரானார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் தனது எதிர்க்கட்சியான சமாஜ்வாதியுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார். உபியில் மொத்தம் உள்ள 80-ல் பெரும்பாலான தொகுதிகளில் வெல்வது அவரது நோக்கமாக உள்ளது. இத்துடன், பஞ்சாப், ராஜஸ்தான், ம.பி., மகராஷ்டிரா, ஒடிசாவிலும் சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடனும், சத்தீஸ்கரில் அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துள்ளார். இதன் மூலம், அதிக தொகுதிகளில் வெற்றியும், ஆதரவும் பெற்ற எதிர்க்கட்சியாகி விட வேண்டும் என்பது மாயாவதியின் விருப்பம்.
இதனால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதில் முக்கிய பங்கு தனக்கு கிடைக்கும் என அவர் நம்புகிறார். குறிப்பாக, தானே பிரதமராவது மாயாவதியின் திட்டமாக உள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஎஸ்பி நிர்வாகிகள் கூறும்போது, “உபி மெகா கூட்டணியின்படி பிரதமராக மாயாவதியும் அடுத்து வரும் உபி தேர்தலில் முதல்வராக அகிலேஷ் யாதவும் அமர்வது என முடிவானது. காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தாலும் ராகுல் காந்தியை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்க முன்வருவது சந்தேகமே. இந்த சூழலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் மாயாவதியை பிரதமராக்க அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள்” என்றனர்.
2009 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி 27.42 சதவீத வாக்குகளுடன் 20 தொகுதிகளில் வென்றது. 2014-ல் பிஎஸ்பி வாக்குகள் 19.82 சதவீதமாகக் குறைந்ததுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து 2017 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் 22 சதவீதமாக உயர்ந்து 19 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT