Published : 29 Apr 2019 02:26 PM
Last Updated : 29 Apr 2019 02:26 PM
காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று காலை 7 மணியிலிருந்து தொய்வின்றி நடைபெற்றுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. அனந்தநாக் மக்களவைத் தொகுதியில் 2ஆம் கட்டமாக இவ்வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இப்பகுதிகள் யாவும் பதட்டமான வாக்குப்பதிவு மையங்கள் கொண்டுள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த நூர்பாத், தேவ்சார், குல்காம் மற்றும் ஹோம்ஷாலிபக் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்றைய வாக்குப்பதிவில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று வாக்குகளை அளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் முகம்மது ரஃபீக் கான் என்பவர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், காஷ்மீர் மாநிலத்திற்கு என்று உள்ள சிறப்பு சட்டப்பிரிவுகளாக 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் நான் வாக்களித்துள்ளேன்.
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகளின் தாக்குதலில் இருந்து நமதுசமுதாயத்தைக் காப்பதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி எனது அனைத்து காஷ்மீர் சகோதரர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
வாக்குச்சாவடி எண் 89 லிருந்து வாக்களித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இன்னொரு வாக்காளர் முகம்மது அஷ்ரப், பேசுகையில், ''இன்று 89வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை அளித்துவிட்டு வருகிறேன்.
இங்கு முக்கிய பிரச்சினை வேலை இல்லா திண்டாட்டம், இன்னொன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்ப வேண்டும். இப்பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுபவர்களே எங்களுக்கு எம்பியாக வரவேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்கள் யாரும் இதை செய்யவில்லை. அதனால் தற்போது எங்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது'' என்றார்.
காஷ்மீரில் மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் இன்று நடைபெறுவது இரண்டாவது கட்டத் தேர்தல். இன்று 6 மணிக்கு முடிவதாக இருந்த வாக்குப்பதிவு மாநில காவல்துறை கேட்டுக்கொண்டதன்பேரில் வாக்குப்பதிவு 4 மணிக்கே முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT