Last Updated : 15 Apr, 2019 11:08 AM

 

Published : 15 Apr 2019 11:08 AM
Last Updated : 15 Apr 2019 11:08 AM

இந்தியா என்றால் மோடி அல்ல; மோடி என்பது இந்தியாவும் அல்ல: மெகபூபா முப்தி கடும் தாக்கு

இந்தியா என்றால் மோடியும் அல்ல, மோடி என்பது இந்தியாவும் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்

ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரை முப்தி, அப்துல்லா குடும்பங்கள் 3 தலைமுறைகளாக ஆண்டுவிட்டன. நாட்டை துண்டாட நினைக்கும் அவர்களை அனுமதிக்கமாட்டோம் " என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி பேசினார். அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி தன்னை நாட்டுக்கு ஒப்பாக, இணையாக வைத்துக்கொண்டு, மக்களை தவறாக வழிநடத்துகிறார். பிரதமர் மோடிக்கு மட்டும் நாட்டைப் பற்றிய சிந்தனை, தேசப்பற்று இல்லை. தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாடு குறித்த தேசப்பற்றும், கடமையும் இருக்கிறது. இந்தியா என்பது மோடியும் அல்ல, மோடி என்பது இந்தியாவும் அல்ல.

மக்களிடம் இருந்து இரக்கத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக, எதிர்க்கட்சிகளை அவதூறாக மோடி பேசுகிறார். இவ்வாறு எதிர்க்கட்சிகளை அவதூறு பேசும் மோடி சார்ந்திருக்கும் கட்சி ஏன் தேர்தலுக்கு முன் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி கூட்டணி குறித்து பேச வேண்டும. கடந்த 1999-ம் ஆண்டில் தேசிய மாநாட்டுக்க கட்சியுடனும், கடந்த 2015-ம் ஆண்டில் பிடிபி கட்சியுடனும் ஏன் கூட்டணி அமைத்தீர்கள்.

அரசியலமைப்புச் சட்டம் 370பிரிவு தெரிந்துதானே ஆட்சி செய்கிறீர்கள். முஸ்லிம்களும், சிறுபான்மையினரும் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களை அழிக்கும் நச்சுதிட்டத்துடன் பாஜக செயல்படுகிறது " எனத் தெரிவித்தார்.

தேசிய மாநாடாட்டுக் கட்சியின் தலைவரும், எம்.பியுமான பரூக் அப்துல்லா, பிரதமர் மோடிக்கு பதில் அளித்து மிர் பஹரி தால் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், " தேசத்தை சாதி ரீதியாக, மதரீதியாக பிளவுபடுத்தும் எண்ணத்துடன்  இருக்கும் அமித் ஷாவும், மோடியும் மக்களின் மிகப்பெரிய எதிரிகள்.

அரசியலமைப்புச் சட்டத்தையே பாஜக மாற்ற முயல்கிறது. எந்த நம்பிக்கையுள்ளவர்களும் வாழ்வதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. அதே அரசமைப்புச் சட்டம்தான் காஷ்மீர் மாநிலத்துக்கு 35ஏ, 370 பிரிவின் கீழ் சிறப்பு உரிமையையும் வழங்கி இருக்கிறது. பாஜகவின் இந்த ஒரு திட்டம் மாநிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் " எனத் தெரிவித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறுகையில் " கடந்த 2014-ம் ஆண்டு மோடி பேசும்போதும், ஜம்மு காஷ்மீர் அப்துல்லா, முப்தி குடும்பத்தாரை விரட்ட வேண்டும் என்று பேசினார். அதன்பின் முப்தி குடும்பத்தாருடன் கூட்டணி வைத்து அவர்களில் இருவரை முதல்வராக்கினார். 2019-ம் ஆண்டில் மீண்டும் இரு அரசியல் குடும்பத்தாரையும் விரட்டுவோம் என்று மோடி கூறுகிறார். இதுவும் மோடியின் வெற்றுப்பேச்சு " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x