Last Updated : 04 Apr, 2019 02:13 PM

 

Published : 04 Apr 2019 02:13 PM
Last Updated : 04 Apr 2019 02:13 PM

புதுடெல்லி ரயில் நிலையத்தில் தவறுதலாக விடுபட்ட உடமைகள்; ஃபேஸ்புக் உதவியுடன் பயணிகளிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி ரயில் நிலையத்தில் விடுபட்ட உடமைகளை ஃபேஸ்புக் மூலம் பயணிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தானாக முன்வந்து செய்யும் ஸ்டேஷன் மாஸ்டருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு நாடு முழுவதிலும் இருந்து பயணிகள் ரயில்களில் வந்து செல்கின்றனர். அப்போது அவர்களில் பலரும் தம் பொருட்களில் ரயில்களிலும், அதன் நிலையங்களின் நடைமேடைகளிலும் தவறுதலாக விட்டுச் சென்று விடுவது உண்டு. இந்த உடமைகள் சிலசமயம் கண்டெடுக்கப்பட்டு அதன் ரயில் நிலைய அலுவலகங்களில் ஒப்படைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. இவற்றில் பலசமயம் லேப்டாப், மொபைல் போன்ற முக்கிய விலை உயர்ந்த பொருட்களும் விடுபட்டு விடுகின்றன.

இதுபோன்ற உடமைகளை மீட்டெடுப்பது பயணிகளுக்குச் சவாலாக அமைந்து விடுகிறது. இந்தப் பணியில் புதுடெல்லியின் ரயில் நிலைய அதிகாரி ராகேஷ் சர்மா பயணிகளுக்கு உதவி வருகிறார்.  இதற்காக சர்மா பயணிகளின் உடமைகளில் ஏதாவது விலாசம் அல்லது கைப்பேசி எண்கள் கிடைக்கிறதா எனப் பார்க்கிறார். பெட்டிகளில் விடுபடும் உடமைகள் பெரும்பாலும் அவர்கள் பயணச்சீட்டுகளின் பிஎன்ஆர் எண்கள் மூலமாகவும் கண்டெடுக்கிறார். இவற்றின் உதவியால் பயணிகளை ஃபேஸ்புக் பக்கங்களில் தேடுகிறார்.

இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் ராகேஷ் சர்மா கூறும்போது,  ''உடமைகளை மறந்த பல பயணிகள் அதை மீட்டெடுக்க காவல் நிலையப் புகார், வழக்கு, நீதிமன்றம் போன்ற வரும் என அஞ்சுகின்றனர். அதனால் ஏற்படும் அலைச்சலுக்கு அஞ்சி உடமைகளை இழக்கத் தயாராகி விடுகின்றனர். இதனால், எனது சொந்த முயற்சியில் செய்தி வரும் இப்பணிக்கு நல்ல பலன் கிடைக்கிறது'' எனத் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் மூலம் கிடைக்கும் பயணிகளிடம் அவர்களது உடமைகளில் உள்ள பொருட்களைப் பற்றி கேட்டு உறுதி செய்கிறார் ராகேஷ் சர்மா. பிறகு அவர்களை நேரில் வரவழைத்து பொருட்களை ஒப்படைக்கிறார்.

வெளியூர்களில் உள்ளவர்களிடம் ரயில் பார்சல் மூலம் அனுப்புவது அல்லது தெரிந்தவர்களிடம் ஒப்படைக்கிறார். ராகேஷ் சர்மாவின் இந்தச் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x